Neet | நீட் தேர்வு முடிவு பற்றிய பதற்றத்தில் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை..!
நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பதற்றத்தில் அரியலூரைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Neet | நீட் தேர்வு முடிவு பற்றிய பதற்றத்தில் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை..! Ariyalur student Kanimozhi daughter of Karunanidhi suicide In fear of NEET result Neet | நீட் தேர்வு முடிவு பற்றிய பதற்றத்தில் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/14/5e6611d23a68fe3666354ec838481964_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அரியலூர் மாவட்டத்தில் உள்ளது துளாரங்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கனிமொழி. இவர், நாமக்கல்லில் உள்ள பள்ளியில் படித்துள்ளார். கனிமொழி தனது 12-ஆம் வகுப்பில் 562.28 மதிப்பெண் பெற்று 93 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளார். மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்காக கனிமொழி தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கனிமொழி நேற்று நீட் தேர்வை எழுதினார்.
தேர்வு எழுதி முடித்த பிறகு, வீட்டிற்கு வந்த கனிமொழி தனது தந்தையுடன் இருந்துள்ளார். பின்னர், நேற்று மாலை யாரும் எதிர்பாராத விதமாக மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு எழுதி வந்த பிறகு, நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மாணவி கனிமொழி காணப்பட்டுள்ளார்.
அந்த பயத்தின் காரணமாகவே கனிமொழி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதிவந்த மாணவி கனிமொழி, சடலமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்ட அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியிலும், சோகத்தில் கதறி அழுதனர்.
பின்னர், உடனடியாக இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக. வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கனிமொழியில் இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் சொந்த ஊரான சாத்தாம்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் நேற்று நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துகொண்ட சோகம் அகலாத நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவும் அரியலூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு காரணமாக அரியலூரில் மட்டும் இரு மாணவிகள், ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அம்மாவட்ட மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)