‘இப்போது தான் அறிந்தேன்’ - பிறைசூடன், புலமைபித்தன் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்!
‘வெளிநாட்டில் இருந்ததால் இப்போது தான் அறிந்தேன்’ - பிறைசூடன், புலமைபித்தன் மறைவு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு.
மறைந்த கவிஞர்கள் புலமைப்பித்தன், பிறைசூடன் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்ததால் தற்போதுதான் மறைவு குறித்து அறிந்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது பேஸ்புக் பக்கத்தில், “தமிழ்த்தாயின் இரு பெருங்கவிகள் இறைவனடி சேர்ந்தனர். வெளிநாட்டில் இருந்ததால் இப்போது தான் அறிந்தேன். இரு மாபெரும் கவிஞர்களுக்கும் புகழ் வணக்கங்கள். அவர்களின் பிரிவில் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
தனது பாடல் வரிகளால் புகழின் உச்சிக்கே சென்ற புலவர் புலமைப்பித்தன் கடந்த 8ம் தேதி 86வது வயதில் காலமானார். அவர் எழுதிய பாடல்கள் காலத்தால் நிலைத்து நிற்பவை. எம்.ஜி.ஆரின் குடியிருந்த கோயில் திரைப்படத்திற்காக’நான் யார், நீ யார், நாலும் தெரிந்தவர் யார், தாய் யார், மகன் யார், தெரியார்’என்ற தனது முதல் பாடலை எழுதி கவனம் பெற்றவர். அதன்பிறகு அடிமைப்பெண் படத்தில் ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் புகழ் பெற்றார். எம்.ஜி.ஆருக்காக ஏராளமான பாடல்களை எழுதிய புலவர் புலமைப்பித்தன் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து பிரிந்து வந்து அதிமுக தொடங்கியபோது அவருடனே இணைந்து செயலாற்றினார். தமிழ், தமிழர், திராவிட இயக்கத்தின் மீது மாறாப்பற்றுக்கொண்டிருந்த புலமைப்பித்தன், ஈழத் தமிழர்கள் மீது பெரும் அன்புக்கொண்டிருந்தார். அவரது இல்லத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் தங்கியிருந்தனர் என்பது வரலாறு. புலைமைப்பித்தன் இல்லத்தை ‘உங்கள் இல்லம் ,ஈழத் தமிழர்களின் இரண்டாவது தாயகம்’ என அவர்கள் வர்ணித்ததும் இப்போது நினைவுக்கூறத்தக்கது
‘இதயமே, இதயமே உன் மவுனம் என்னை கொல்லுதே’ என்ற பாடலை ‘இதயம்’ திரைப்படத்தில் எழுதி, காதலின் வலியை தன் வரிகள் மூலம் உணர்த்திய கவிஞர் பிறைசூடன், உடல்நலக்குறைவால் அக்டோபர் 8ம் தேதி காலமானார். அவர் காலமானாலும் அவர் இயற்றிய பாடல்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்பவை. 1956ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன், 1985ஆம் ஆண்டு வெளியான ‘சிறை’ திரைப்படத்திற்காக தன்னுடைய ’ராசாத்தி ரோசா பூவே’ என்ற பாடலை எழுதி, திரையுலகில் கால் பதித்தார். பின்னர் அவர் எழுதிய பாடல்கள் எல்லாம் திரையுலகில் கால் பதிக்க நினைக்கும் பாடலாசிரியர்களுக்கு வழிகாட்டி தடமாக அமைந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்