‛இவங்களே வைப்பாங்களாம்... இவங்களே எடுப்பாங்களாம்’ ஒபிஎஸ்-ஈபிஎஸ்-அண்ணாமலை சந்திப்புக்கு பின் பாஜக கருத்து!
பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸை சந்தித்து பேசினார்
கடந்த ஜூலை 17ஆம் தேதி பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வங்கிக்கும் கட்சி தலைவர்களை சந்திக்கும் நடவடிக்கையாக இன்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று சந்தித்து பேசினார்.
2019 நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தல் ஆகிய தேர்தல்களில் அதிமுக உடன் பாஜக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்த நிலையில் பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, புதிய மாநில தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை முதல் முறையாக அதிமுக தலைவர்களை சந்தித்து பேசினார்.
முதலில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரின் வேஸ் சாலையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, அதை தொடர்ந்து தி.நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் தங்கமணி,வேலுமணி, ஜேசிடி.பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி எம்.என்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கடந்த காலங்களில் பல்வேறு தேர்தல்களை அதிமுக-பாஜக கூட்டணி இணைந்து சந்தித்த நிலையில், வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்களை, பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளது, ஒரு சுமூக நடவடிக்கை என்றே பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தலைவர்கள் உடனான சந்திப்புக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சி சார்பில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி
அதிமுக தலைவர்கள் உடனான இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை கட்சியின் மூத்த நிர்வாகிக சந்தித்து வருவதுடன், கூட்டணி கட்சி தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வருவதாக கூறினார்.
மேலும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்றுவரும் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய வி.பி.துரைசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஒரு பழிவாங்கும் செயலாகவே பாரதிய ஜனதா கட்சியின் கருதுவதாகவும், பணத்தை அவர்களே வைத்துவிட்டு அவர்களே எடுப்பது ஒன்றும் புதிதல்ல என்று கூறினார்.