வன்னியர் சங்க கட்டிடம்: திமுக அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் அன்புமணி ஆதரவாளர்கள் - நடந்தது என்ன?
"வன்னியர் சங்கம் கட்டிடம் விவகாரத்தில், தமிழக அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆஜராகியதற்கு அன்புமணி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்"

செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலையில் வன்னியர் சங்கம் கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிற மாவட்டங்களை சேர்ந்த, அரசு போட்டி தேர்வுக்கு பயிற்சி எடுப்பவர்களும், இங்கு தங்கி அதற்கான பயிற்சிகளை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
வன்னியர் சங்கம் கட்டிடம் பிரச்சனை
பரங்கிமலையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில், 43 ஆண்டுகளுக்கு முன், வடபழனி கோவிலுடன் இணைக்கப்பட்டது. தொடர்ந்து, காசிவிஸ்வநாதர் கோவில் நிர்வாகத்தை, வடபழனி கோவில் நிர்வாக அதிகாரிகளே கவனித்து வருகின்றனர். அந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில், வன்னியர் சங்கம் கட்டிடம் இருப்பதாக, கூறி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வன்னியர் சங்கம் கட்டிடத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். வன்னியர் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. தமிழக அரசு சார்பில் இந்த வழக்கில், மத்திய அரசுக்கான தலைமை வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் ஏன் ஆஜரானார் என பாமகவினர் சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அன்புமணி ஆதரவாளர்கள் சொல்வது என்ன ?
இது தொடர்பாக பாமக வழக்கறிஞரும் அன்புமணி ஆதரவாளருமான பாலு தனது சமூக வலைதள பக்கத்தில் செய்துள்ள பதிவு பின்வருமாறு: சென்னை கிண்டியை அடுத்த பட் சாலையில் வன்னியர் சங்கத்தின் மாநில தலைமை அலுவலகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி, ஏதோ பயங்கரவாதிகளைப் பிடிக்க வருவதைப் போல 500-க்கும் அதிகமான காவலர்கள் துப்பாக்கிகள் மற்றும் தடிகளுடன் வந்தனர்.
உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து உயர்நீதிமன்றத்திற்கு சென்றோம். அரசின் அநீதிக்கு எதிரான வினாக்களை எழுப்பினேன். அதில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்ட உயர்நீதிமன்றம், உடனடியாக அந்த இடத்தை வன்னியர் சங்கத்திடம் ஒப்படைக்கும்படி இடைக்கால ஆணை பிறப்பித்தது. பின்னர் 2023-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், வன்னியர் சங்கக் கட்டிடம் அமைந்துள்ள இடம் மத்திய அரசுக்கு சொந்தமானது. அதில் தமிழக அரசுக்கு பங்கு இல்லை என்று கூறி விட்டது.
பாமகவினர் குற்றச்சாட்டு
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதன் முதல் கட்ட விசாரணைக்காக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், அதாவது அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி என்பவரை ஆஜராக வைத்ததனர். அதன்பின் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் கோடிக்கணக்கில், கட்டணம் செலுத்தி ஒவ்வொரு மூத்த வழக்கறிஞரையும், அழைத்து வந்து ஆஜராக வைக்கிறது திமுக அரசு என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
மாநில அரசில் தலை போகிற பிரச்சினை ஏதாவது இருந்தால், அரிதிலும் அரிதான நிகழ்வாக அட்டர்னி ஜெனரலை மாநில அரசு வாதிட வைக்கும். ஆனால், வன்னியர் சங்க கட்டிட வழக்கு, என்பது மிகச் சாதாரண வழக்கு. ஆனால், அந்த வழக்குக்காக இந்தியாவின் தலைமை வழக்கறிஞரை தமிழக அரசு வாதிட வைக்கிறது, என கேள்வி எழுப்பி உள்ளார்.
சமூக வலைதளத்தில் பதிவுகளால் மோதல்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் எந்த வழக்கிலும் அட்டர்னி ஜெனரலை வாதிட வைக்கவில்லை. வன்னியர் சங்க கட்டிட வழக்கில் மட்டும் தான் வாதிட வைத்துள்ளனர். திமுக அரசு நினைத்திருந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கில், தமிழக அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரலை ஆஜராக வைத்து வன்னியர் இட ஒதுக்கீட்டை காப்பாற்றியிருக்கலாம். ஆனால், அப்போது மிகச்சாதாரண வழக்கறிஞரை வாதிட வைத்து வன்னியர் இட ஒதுக்கீட்டை பறிக்க வைத்தனர் என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
வன்னியர் சங்கம் கட்டிடத்திற்கு ஆதரவாகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் அன்புமணி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.





















