அதிமுக வழக்கு: இறுதி விசாரணைக்கு தயார்: உயர்நீதிமன்றத்தில் ஒபிஎஸ் - இபிஎஸ் ஒப்புதல்
பொதுக்குழு வழக்கு செல்லும் என வழங்கப்பட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை ஒட்டி ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
பொதுக்குழு வழக்கு செல்லும் என வழங்கப்பட்ட தீர்ப்பை ஒட்டி ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயிர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு வழக்கை விசாரணை செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இந்த பொதுக்குழு செல்லும் என வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்பட்டது.
இந்த வழக்கில் வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு பி.எஸ் ராமன், “ஓ பன்னீர்செல்வத்தை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த நடைமுறைகள் மட்டும் எப்படி சரியாகும்” என கேள்வி எழுப்பினார். இந்த வாதத்தை முன்வைத்த பின் நீதிபதிகள் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கபட்டுவிட்டாதா என கேள்வி எழுப்பினார்கள்.
மூத்த வழக்கறிஞர் அப்துல்சலீம் வாதிடுகையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என கூறினார். மேலும் உச்சநீதிமன்றம் உத்தரவு தெளிவாக உள்ளது, எங்களை வாக்களிக்க அனுமதித்ததுள்ளது என மனோஜ்பாண்டியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் ஓபிஎஸ் தரப்பில், “வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அவசரமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனால் இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட இயலும். வழக்கு விசாரணை முடியும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்” என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கு பின் வாதிட்ட ஈபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண், “தற்போது ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை. பொது செயலாளர் பதவி மட்டுமே உள்ளது. கட்சியில் 95% ஈ.பி.எஸ் தலைமை ஏற்றுள்ளனர். கட்சி விதிகளின் படி தேர்தல் நடத்தபட்டு பொதுச் செயலாளராக தேர்வாகி உள்ளார். பொதுச் செயலாலர் தேர்தலில் போட்டியிட ஒரு வேட்பாளருக்கு குறைந்தபட்சம் 10 மாவட்ட செயலாளர்களின் ஆதரவை பெற வேண்டும். ஆனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு அப்படி இருப்பதாக தெரியவில்லை. அப்படிப்பட்ட நிலையில் தான் தேர்தல் நடத்தப்பட்டு பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகியுள்ளார். சட்டமன்றத்திலும் ஒபிஎஸ் இருக்கையை மாற்றக் கோரி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இறுதி விசாரணைக்கு தயார்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வாதத்தினை கேட்ட நீதிபதிகள், இரு தரப்பிலும் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டது. மேலும் ஏப்ரல் 3ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.