‛விநாயகர் சதூர்த்திக்கு பணம் வசூலிக்கவா இந்து மகா சபா?’ சபா தலைவர் ஜாமினை தள்ளுபடி செய்து நீதிபதி காட்டம்!
இந்து மகா சபா என்பது ஒரு காலத்தில் தேவாரம், திருவாசகம் போன்ற பாசுரங்களை பாடுவதற்காக இருந்தது. தற்போது விநாயகர் சதுர்த்திக்கு பணம் வசூல் செய்வதற்காக உள்ளது - நீதிபதி வேதனை
பண மோசடி வழக்கில் கைதான இந்து மகா சபா தலைவர் ஸ்ரீகண்டன் என்ற கோடம்பாக்கம் ஸ்ரீ ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் விமல்சந்த் என்பவரிடம் ரூ.14 லட்சத்தை பெற்று கொண்டு திரும்ப கொடுக்கமல் ஏமாற்றியதாக ஸ்ரீகண்டன் மீது கீழ்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல வழக்கு இவர் மீது உள்ள நிலையில், நில அபகரிப்பு வழக்கில் கடந்த 14ஆம் தேதி இவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், பண மோசடி வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி ஸ்ரீகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீகண்டன் மீது ஏற்கெனவே 4 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்து மகா சபா என்பது ஒரு காலத்தில் தேவாரம் மற்றும் திருவாசகம் போன்ற பாசுரங்களை பாடுவதற்காக இருந்ததாகவும், தற்போது இந்து மகா சபாக்கள் விநாயகர் சதுர்த்திக்கு பணம் வசூல் செய்வதற்காக உள்ளதாக நீதிபதி வேதனையுடன் கூறியிருந்தார்.
நிலமோசடி வழக்கு விவரம்:
கடந்த 2019-ஆம் ஆண்டு அய்யப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக காவல் உதவி ஆணையர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும், தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாசராவ் ஆகியோர் மீது ராஜேஷ் புகார் அளித்திருந்தார்.
தொழிலதிபர் ராஜேஷ் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காததால் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் ராஜேஷ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு இருப்பதால் டிஜிபி அலுவலகத்திற்கு இந்த புகாரை சென்னை போலீசார் அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் மீதான இந்த புகார் குறித்து முகாந்திரம் இருக்கிறதா விசாரிக்க தமிழக டிஜிபி சிபிசிஐடிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலதிபரை கடத்தி நில மோசடி செய்தது தெரியவந்ததால் திருமங்கலம் உதவி ஆணையராக இருந்த சிவக்குமார், காவல் ஆய்வாளராக இருந்த சரவணன், காவல் உதவி ஆய்வாளராக இருந்த பாண்டியராஜன், அனைத்திந்திய இந்து மகா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, அவரது மகன் தருண் கிருஷ்ண பிரசாத், சிவா உள்ளிட்ட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலி ஆவணங்கள் தயாரித்தல், பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என பயன்படுத்துதல், மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் கானத்தூர் அருகே கோடம்பாக்கம் ஸ்ரீயை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.