பணமோசடி வழக்கு: ஹரி நாடாரின் வங்கிக் கணக்கை முடக்கியது காவல்துறை..
ஹரி நாடார் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகையின் மதிப்பு மட்டும் 2 கோடி ரூபாய் இருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் பண மோசடி செய்த குற்றத்திற்காக ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், கோவளத்தில் தலைமறைவாக இருந்த ஹரி நாடாரை கைது செய்த காவல்துறை, அவரிடம் இருந்த பி.எம்.டபிள்யூ புதிய கார் மற்றொரு சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தது. மேலும், ஹரிநாடாரின் வங்கிக் கணக்கையும் காவல்துறை நேற்று முடக்கியது.
பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 360 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி, 7.2 கோடி ரூபாய் கமிஷன் தொகையை பெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், உரிய நேரத்தில் கடன் தொகையை திருப்பித் தரவில்லை. மேலும், போலி வங்கி கணக்கையும், காசோலைகளையும் கொடுத்து ஏமாற்றி வந்துள்ளார்.
தான் மோசடிக்கு உட்படுத்தப்படுவதை உணர்ந்த தொழிலதிபர் வெங்கடரமண சாஸ்திரி, பெங்களூரு கப்பன்பார்க் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஹரிநாடாரின் பனங்காட்டுப் படை கட்சி 44 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. மேலும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஹரிநாடார் 37632 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். இந்த தொகுதியில் 3605 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் மனோஜ்பாண்டியன் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்கு எண்ணிக்கை 73985. திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 70380 வாக்கு பெற்று இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். ஹரி நாடார் பெற்ற சமூக வாக்குகளே ஆலடி அருணாவின் தோல்விக்கு வழிவகுத்தது.
இதற்கிடையே, தேர்தல் வாக்கெடுப்பு முடிந்த பிறகு ஓய்வெடுப்பதற்காக ஹரி நாடாரும், அவாது கேரளா நண்பருமான ரஞ்சித் பணிக்கரம் கேரள மாநிலத்துக்கு சென்றிருக்கின்றனர். ரஞ்சித் பணிக்கரை கொல்லம் நகரில் வைத்து பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த மே 4-ஆம் தேதி ஹரி நாடாரையும் காவல்துறை கைது செய்தது.
இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெங்களூரு சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள ஹரி நாடாரிடம், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஹரி நாடார் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகையின் மதிப்பு மட்டும் 2 கோடி ரூபாய் இருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரனையில், ஹரி நாடார் மற்றும் அவரது கூட்டாளர்கள் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழிலதிபர்களிடம் பண மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது