AIADMK: 10 நாட்களுக்கு பிறகு.. சீல் அகற்றப்பட்டு திறக்கப்பட்டது அதிமுக தலைமை அலுவலகம்!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.
அதிமுக தலைமை அலுவலத்தின் சாவியை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அதை சீல் வைத்து மூட உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், "ஒ.பன்னீர்செல்வம் அணியினர் அலுவலகத்திற்கு செல்லும்வரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் நுழைந்த பிறகே லேசான தடியடியை நடத்தி உள்ளனர். பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை திரட்டி ஆயுதங்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தது, வன்முறையை கட்டவிழ்த்தது போன்றவற்றை செய்திருக்க கூடாது" எனக் கூறப்பட்டது.
கடந்த 11ஆம் தேதி, அதிமுக பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினருக்கிடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, "காவல்துறை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வன்முறை தடுக்கப்பட்டிருக்கும்.
பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் கட்சியின் பெருமான்மையினரின் முடிவு. அவற்றை உரிமையியல் நீதிமன்றம் ரத்து செய்யாத வரை, அந்த முடிவே மேலோங்கி நிற்கும். மேலும், ஒ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் கட்சி அலுவலக கட்டடத்தின் மீதான உரிமையை கோர முடியாது" என்றார்.
காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஆர்.டி.ஓ. ஒப்படைக்க வேண்டும் எனவும், காவல்துறை 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்கு தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து பழனிசாமி நீக்கினார். அதுமட்டுமின்றி, அதிமுக சட்டப்பேரவை குழு துணை தலைவர் பதவியும் ஓபிஎஸிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்