’திமுக எங்களுக்கு செஞ்ச கொடுமைகள் எல்லாம் படத்துல எங்க?’ - ஜெயக்குமாரின் ’தலைவி’ ரிவ்யூ
எம்.ஜி.ஆர்., முன்பு ஜெயலலிதா கால் மேல் கால்போட்டு அமர்ந்திருக்கிற மாதிரி காட்சி உள்ளது அதையும் நீக்க வேண்டும்.
கங்கனா ரனாவத் நடிப்பில் ’தலைவி’ திரைப்படம் : அதிமுக ஜெயக்குமார் ரிவ்யூ இதுதான்!
நடிகர்கள் கங்கனா ரனாவத் மற்றும் அர்விந்த் சாமி நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவி படம் தற்போது வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது. படத்தைப் பார்த்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
படம் பார்த்துவிட்டு வந்த பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ’எம்.ஜி.ஆர் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. 1967-ஆம் ஆண்டில் படுத்த படுக்கையாக இருந்தபோது போஸ்டர் அடித்தே வெற்றி பெற்றார். காங்கிரஸை வீழ்த்தியது திமுக வெற்றி பெற்றது. அண்ணா கேட்டபோது புரட்சித் தலைவர் பதவியை மறுத்தார். பேரறிஞர் அண்ணா புரட்சித்தலைவருக்கு சிறுசேமிப்புத் துறைத் தலைவர். அதுகூட அண்ணாவாகக் கொடுத்த பதவி. அண்ணாவின் மறைவுக்குப் பிறகுகூட கருணாநிதியை கட்சித் தலைவராக முன்மொழிந்தது எம்.ஜி.ஆர்தானே ஒழிய இந்தப் படத்தில் கூறப்பட்டிருப்பது போல அவர் பதவிக்கு ஆசைபட்டு கட்சியை விட்டு வெளியேறவில்லை. திமுக குடும்பகட்சியாக மாறிவந்ததால் கட்சியின் கணக்கு வழக்கு விவரங்களை எம்.ஜி.ஆர் கேட்டார். அதனால்தான் அவர் திமுகவிலிருந்து வெளியேறினார்.
படத்தில் எம்.ஜி.ஆர்.-ஐ தவறாக சித்தரித்திருக்கும் காட்சியை நீக்க வேண்டும். மேலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை எந்தக் காலத்திலும் சிறுமை படுத்தியதே இல்லை. ராமன் தேடிய சீதை படத்தில் அதனால்தான் 'திருவளர்ச்செல்வியோ நான் தேடிய தலைவியோ' என்கிற வரியே இடம்பெறும். ஜெயலலிதாதான் அடுத்த தலைவர் என எங்களுக்கு அந்தப் பாடல் வழியாகச் சொன்னார். ஆனால் படத்தில் ஜெயலலிதாவை அவர் சிறுமை படுத்துவதாக காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. எம்.ஜி.ஆர் முன்பு ஜெயலலிதா கால் மேல் கால்போட்டு அமர்ந்திருக்கிற மாதிரி காட்சி உள்ளது அதையும் நீக்க வேண்டும். அதிமுக வரலாற்றை எடுத்துக்கொண்டால் திமுக கொடுத்த தொல்லைகள்தான் அதிகம். அது பற்றி எதுவுமே படத்தில் இல்லை’ எனக் கூறியுள்ளார்.
முன்னதாக படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருந்த கங்கனா கூறுகையில், ‘இது குறித்து பேசிய கங்கனா, ’’ஜெயலலிதாவின் பாடல்களிலிருந்து சின்னச் சின்ன தருணங்களை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார், மேலும் அவரது அசைவுகளை உன்னிப்பாக கவனித்து உள்வாங்க சொன்னார். "ஜெயா அம்மாவின் பாடல்கள் வித்யாசமானவை, ஏனென்றால் அவை பாப் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அந்த தடங்களின் கலவையாகும். ஜெயா அம்மா மற்றும் எம்ஜிஆர் 60 முதல் 70 பாடல்களை ஒன்றாக கொடுத்துள்ளனர். அவர்கள் பல வருடங்கள் ஒன்றாக வேலை செய்தனர், ஆனால் நாங்கள் அதை வெறும் நான்கே நாட்களில் செய்ய வேண்டி இருந்தது. ஒரு நாளில், நான் பல தோற்றங்கள் மற்றும் சிகை அலங்காரங்கள் மாற்ற வேண்டியிருக்கும். " என்றார்’