ADMK - BJP: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தொடருமா..? எடப்பாடி பழனிசாமி 'பளீச்' பதில்..!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமியிடம் பாஜக கூட்டணி குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது.
சமீப காலமாகவே அதிமுக, பாஜகவுக்கு இடையே உரசல் போக்கு நீடித்து வருகிறது. பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அதிமுக கட்சியில் இணைந்தனர். கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்குள்ளே நிர்வாகிகள் கட்சி மாறியது பாஜகவினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
அதிமுக - பாஜக கூட்டணி:
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி பலரும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு பதிலடியாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பாஜகவுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
அதேசமயம், தூத்துக்குடியில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அண்ணாமலை, “பாஜக கூண்டுக்கிளி அல்ல. பறக்க தயாராக இருக்கிறோம். பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்து விட்டது. தமிழகத்தில் புரட்சிக்கான நேரம் வந்துவிட்டது” என தெரிவித்தார்.
இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதோ என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில் அதிமுக கூட்டணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்தார். தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமித்ஷா கூறியிருந்தார்.
அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்:
"2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், அதிமுகவுடனான கூட்டணி தொடரும். அந்த கூட்டணியில் தான் இருக்கிறோம்” என அமித்ஷா திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அமித் ஷாவின் கருத்தை முன்மொழியும் விதமாக பேசியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, "பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும்" என்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமியிடம் பாஜக கூட்டணி குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பழனிசாமி, இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு:
தொடர்ந்து திமுக அரசை விமர்சித்த அவர், "அதிமுக ஆட்சியில் அட்சய பாத்திரம் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. முதன்முதலாக காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகம் செய்ததே அதிமுக அரசுதான். இவை எல்லாம் அதிமுக ஆட்சியின் முன்னோடி திட்டங்கள். கல்வியில் ஆர்வம் செலுத்தி வருகையை அதிகமாக்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. இன்று போதைபொருள் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. கஞ்சா விற்பனை அனைத்து இடங்களிலும் நடக்கிறது. இது தொடர்பாக ஊடகத்தில், பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்றால் அதை அப்படி மறைத்து பேசுகிறார். இரண்டு நாள்களுக்கு முன்பு அதிமுக நிர்வாக கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்" என்றார்.