நேற்று திருப்பத்தூர்... இன்று டெல்லி... நாளை..? ராஜேந்திர பாலாஜியை தேடி சுற்றுலா செல்லும் போலீசார்!
முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத் துறையில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத் துறையில் அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவினில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை இன்னமும் போலீஸார் தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டு போலீஸாருக்குப் போக்குக் காட்டிவரும் அவர் கைலாசாவில் இருக்கிறார் என்றுகூட பேசப்பட்டுவிட்டது. ஆனால் இன்னும் அவர் சிக்கியபாடில்லை.
ராஜேந்திர பாலாஜி மீதான புகார் என்ன?
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி தற்போது அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கொடுத்த புகாரில், தனது உறவினர் ஒருவருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளராகப் பணி வாங்கி கொடுப்பதாக ரூ.30 லட்சம் பணம் வாங்கியதாக அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மாரியப்பன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி உள்பட மூவர் மீதும் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதான் முதல் வழக்கு. இதற்குப் பின்னர், வெம்பக்கோட்டை அதிமுக மேற்கு ஒன்றியச் செயலரும் முன்னாள் சபாநயாகர் காளிமுத்துவின் கடைசி தம்பியுமான விஜய நல்லதம்பி என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் மூலம் ரூ.1.60 கோடி பெற்றதாகக் கூறினார். அவரது உதவியாளர்கள் அண்ணன் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் மீதும் புகார் அளித்தார்.
மேலும், கட்சிக் கூட்டங்கள் நடத்தியற்காக நான் செலவு செய்த ரூ.1.50 கோடி வரை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி எனக்குக் கொடுக்க வேண்டும். இவ்வாறு எல்லா வகையிலும் சுமார் ரூ.3 கோடி வரை என்னை முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஏமாற்றியதாக புகார் அளித்தார்.
இந்தப் புகார்கள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பலராமன், பாபுராஜ் மற்றும் முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து ராஜேந்திர பாலாஜியை தேடி வருகின்றனர்.
அப்படி எங்குதான் சென்றார் ராஜேந்திர பாலாஜி?
இதுவரை கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி, பாண்டிச்சேரி, திருப்பதி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டு தேடியுள்ளது. இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜி கைலாசா சென்றுவிட்டதாகவும் கூட தகவல் வெளியானது.
இதனால், கைலாசா மீண்டும் நெட்டிசன்களிடம் சிக்கிச் சின்னாபின்னமானது. கைலாசா நித்யானந்தா அவரது சீடர்கள் வாசம் செய்யும் இடம் என்பதாலேயே அதன் மீது நெட்டிசன்களுக்கு எப்போதுமே பேரார்வம். ராஜேந்திர பாலாஜி கைகளில் பலவண்ண நிற ஆன்மீகக் கயிறு கட்டியிருப்பதால், நெற்றியில் வரிசைகட்டி விபூதி, குங்குமும், சந்தனம் இத்யாதி இத்யாதி எனக் காட்சியளிப்பதாலும் அவர் கைலாசா சென்றிருக்க அதிக வாய்ப்பிருப்பதாக வாத விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்றது.
ராஜேந்திர பாலாஜி எங்கே? சென்னை, டெல்லி, கைலாசா வரை அடிபடும் பெயர் . இந்நிலையில், இன்றைய லேட்டஸ்ட் தகவலாக ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், அவர் டெல்லியில் பதுங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் தனிப்படை போலீஸார் டெல்லி விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை பல பகுதிகளில் ராஜேந்திர பாலாஜி பதுங்கி இருப்பதாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டை என்கிற பெயரில், டூர் சென்று கொண்டிருக்கின்றனர். எந்த தகவலும், இதுவரை அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால், டூர் மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்