Agni Natchathiram 2023: இன்று தொடங்குகிறது ‘அக்னி நட்சத்திரம்’ .. வெப்பநிலை அதிகரிக்கும் .. பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று (மே 4) முதல் ஆரம்பவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று (மே 4) முதல் ஆரம்பவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மே மாதம் என்றாலே சிறுவர்களுக்கு பள்ளி விடுமுறை என்பது, பெரியவர்களுக்கு அக்னி நட்சத்திரம் என்பதும் தான் நியாபகத்தில் வரும். அக்னி நட்சத்திரம் என்பது ஜோதிடத்தில் வரும் நட்சத்திரங்களில் ஒன்று கிடையாது. பஞ்சாங்கத்தில் பரணி 3 ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை தான் நாம் அக்னி நட்சத்திரமாக கருதுகிறோம்.
அதாவது சித்திரை மாதம் 21 ஆம் தேதி துவங்கி, வைகாசி மாதம் 14 ஆம் தேதி வரையிலான 21 நாட்களை அக்னி நட்சத்திர காலம் என கணக்கில் கொள்கிறோம். அதன்படி மே 4 ஆம் தேதியான இன்று தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 29 ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே அவசிய தேவையின்றி மக்கள் பகல் பொழுதில் வெளியே வருவதை தவிர்க்கலாம். மேலும் பழங்கள், தண்ணீர், செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படாத குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை அருந்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும், வெளியே செல்லும் போது குடையை எடுத்து செல்வது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவுகிறது. இதனால் காற்றில் ஈரப்பததத்தின் அளவு கூடியிருப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக வெப்பம் சற்று தணிந்து வந்தது. இந்நிலையில் அக்னி நட்சத்திரத்தின் தொடங்குவதால் மழையின் தாக்கம் குறைந்து வெப்பநிலை அதிகமாகவே வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.