திருவண்ணாமலை : 16 ஆண்டுகளுக்கு பிறகு, சாத்தனூர் அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் திறப்பு..
திருவண்ணாமலை சாத்தனூர் அணைக்கு வரலாறு காணாத அளவில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால், வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்பெண்ணையின் குறுக்கே காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சாத்தனூர் அணை தமிழக அணைகளில் முக்கியமான ஒன்று. இந்த அணையின் நீராதாரத்தை நம்பி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 19,639 ஏக்கர் பரப்பளவிலும், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 30,537 ஏக்கர் பரப்பளவிலும் சாகுபடி நடக்கிறது. அதோடு, திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 ஏரிகள், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 71 ஏரிகளும் சாத்தனூர் அணை தண்ணீரை நம்பியிருக்கிறது.
சாத்தனூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 119 அடி கொள்ளளவும் 7,321 மில்லியன் கன அடியாகும் இந்த அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகள் கடந்த நிலையில், அணையில் அமைக்கப்பட்டுள்ள 20 அடி உயரமுள்ள நீர்போக்கி மதகுகள் பழுதடைந்தது. எனவே, அதனை சீரமைக்கும் பணி சில நாட்களாக நடந்து வருவதால், அணையில் அதிகபட்சம் 99 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீரை நிரப்ப சேமிக்கமுடியும், மதகுகள் சீரமைப்பு பணி முடியும் வரை இந்த நிலையே நீடிக்கும்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே 99 அடியை எட்டிவிட்டது. எனவே, அணைக்கு வரும் உபரிநீர் தொடர்ந்து தென்பெண்ணை ஆறு வழியாக வெளியேற்றப்படுகிறது. அதன்படி, சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக இருந்தது. ஆனால், தொடர்ந்து பெய்த கனமழையால், நேற்று இரவு திடீரென அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயரத் தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
எனவே, அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வழக்கமாக வெளியேற்றப்படும் 9 கண் மதகுகள் வழியாக மட்டுமின்றி, அவசர காலத்துக்கு பயன்படுத்தப்படும் கூடுதலான இரண்டு மதகுகள் வழியாக உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே, அணையில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சாத்தனூர் அணையின் வரலாற்றில், அதிகபட்சமாக 50 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீரை திறந்துவிட்டிருப்பது இது மூன்றாவது முறை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்பு, கடந்த 1972-ஆம் ஆண்டு தமிழகத்தை புரட்டிப் போட்ட கனமழையின்போது, அதிகபட்சமாக சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.அதைத்தொடர்ந்து, கடந்த 2005-ஆம் ஆண்டு தமிழகத்தை அடுத்தடுத்து உலுக்கிய பியார், பாஸ், பனூர் புயல்களின்போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கின்போது, சாத்தனூர் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு, கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அணையில் இருந்து அதிகபட்ச அளவிலான தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சாத்தனூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்திருப்பதாலும், தொடர் மழையாலும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே, கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், சாத்தனூர் அணைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.