10 ஆண்டுகளுக்கு பின் பொள்சி திருவிழா.. நீலகிரியில் தோடர் இன மக்களின் பாரம்பரிய திருவிழா..
10 ஆண்டுகளுக்கு பின் நீலகிரியில் தோடர் இன மக்கள் பொள்சி என்ற பாரம்பரிய திருவிழாவை கொண்டாடினர்.
10 ஆண்டுகளுக்கு பின் நீலகிரியில் தோடர் இன மக்கள் பொள்சி என்ற பாரம்பரிய திருவிழாவை கொண்டாடினர். தோடர் பழங்குடியினர் மக்கள், மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளில் தங்களுக்கென பாரம்பரிய உடை, தனி கலாச்சாரத்துடன் குடில் அமைத்து நூற்றாண்டைக் கடந்து வாழ்ந்து வருபவர்கள்.
6 பழங்குடியினங்கள்:
நீலகிரி மலையில் குரும்பர், இருளர், காட்டுநாயக்கர், பனியர், தோடர்,கோத்தர் என 6 பழங்குடியினங்கள் வாழ்ந்து வருகின்றனர். உதகை அருகே ஏராளமான தோடர் இன பழங்குடி மக்கள் ஒன்றிணைந்து நடனமாடி பாரம்பரிய திருவிழாவை கொண்டாடினர்.
இதில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தோடர்கள் 50க்கும் மேற்பட்ட மந்துகளில் வசித்து வருகின்றனர். மந்து என்பது தோடர்கள் வசிக்கக் கூடிய இடமாகும்.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா:
இந்த நிலையில் ஊட்டி அருகே தாரநாடு மந்து பகுதியை சேர்ந்த தோடர் இன மக்களின் பாரம்பரிய கோவில் சோலூர் அருகே ஓல்கோடு மந்தில் உள்ளது. ஆவுல் என்ற புல் மற்றும் பெரம்பு ஆகியவற்றை கொண்டு அமைக்கப்பட்டு உள்ள இந்த கோவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு விழா நடத்தபட்டு வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு இந்த கோவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், புற்களை மாற்றும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்தது.
பொள்சி திருவிழா:
அதற்காக 30 நாட்கள் விரதம் இருந்த தோடர் இன ஆண்கள் அப்பர்பவானி பகுதிக்கு சென்று ஆவுல் என்ற புற்களையும், மசினகுடிக்கு சென்று பெரம்பு, மூங்கில் போன்றவற்றையும் எடுத்து வந்து கோவிலின் கூறையை மாற்றி புதுப்பித்து வந்தனர். பொள்சி என்று அழைக்கப்படும் திருவிழா நேற்று நடைபெற்றது.
இதையொட்டி தோடர் இன ஆண்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து வந்து பிறை வடிவிலான கோவிலின் முன்பு மண்டியிட்டு வணங்கினர். கோவில் வாயிலின் முன்புறத்தில் பாரம்பரிய நடனத்தை மூத்த தோடர் இன ஆண்கள் ஆடினர்.
மொர்டுவெர்த்
இதற்கு பின் தோடர் இன ஆண்கள் வட்டமாக நின்று ஒருவருக்கு ஒருவர் கைக்கோர்த்து பாரம்பரிய நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் தோடர் பழங்குடியினர் ஆண்டு இறுதி அல்லது புத்தாண்டு முதல் வாரத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையில் தங்களது குல தெய்வம் கோவிலில் விவசாயம் செழிக்கவும், தாங்கள் வளர்க்கும் எருமைகள் விருத்தியடையவும் வன விலங்குகளிடமிருந்து காத்திடவும் 'மொர்டுவெர்த்' என்கிற பண்டிகையை கொண்டாடுகின்றனர். 'மொர்டுவெர்த்' என்பது அவர்கள் பாஷையில் 'பெரிய கோவில்' என்பது பொருளாகும். நீலகிரி மலைப்பகுதியில் வசிக்கும் தோடர் இன மக்கள் அனைவருக்கும் இது பொதுவான கோவில் என்பதால் இந்த கோவிலே அவர்களது பெரிய கோவிலாக விளங்குகிறது. அந்த பெரிய கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாவே 'மொர்டுவெர்த்' எனப்படுகிறது.