Erode East Election: மாற்றம் கண்ட தேசிய கூட்டணி.. பாஜகவை ஓரம் கட்டும் ஈபிஎஸ்.. களம் காண தயாரான ஓபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைதேர்தலில் பாஜகவை ஈபிஎஸ் தரப்பிலான அதிமுக அணி ஓரம் கட்டியுள்ள சூழலில், தேசிய கூட்டணியில் முறிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவை சீண்டிய பாஜக:
அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்னை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் கூட்டணி கட்சி தலைவர்கலை நேரில் சந்தித்து, இருதரப்பும் ஆதரவு கோரியிருந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், ஈபிஎஸ் தரப்பிற்கு அதரவு தெரிவித்தாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக இதுவரை தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில், அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம், பாஜகவின் முடிவிற்காக அதிமுக வேட்பாளரை அறிவிக்காமல் காத்திருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர்கள் கத்திருக்கட்டும், அதைபற்றி எங்களுக்கு கவலையில்லை என நாராயணன் திருப்பதி பதிலளித்தார். இது அதிமுகவினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
வேட்பாளரை அறிவித்த அதிமுக:
பாஜகவின் கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதிரடியாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏவான தென்னரசு போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைதொடர்ந்து, ஈரோடு கிழக்கு பகுதியில் அதிமுகவின் தேர்தல் பணிமனை திறக்கப்பட்டு, வேட்பாளர் தொண்டர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டார்.
சர்ச்சையை கிளப்பிய பேனர்:
வேட்பாளர் அறிமுகத்தின் போது அங்கு வைக்கப்பட்டு இருந்த, பேனர் தான் இப்போது அதிமுக - பாஜக கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணிமனையில் வைக்கப்பட்டுள்ள அந்த பேனரில், ``அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழ்நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.கவின், "தேசிய ஜனநாயகக் கூட்டணி" என்ற பெயரையே அ.தி.மு.க பயன்படுத்தி வந்தது. ஆனால், இப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் "தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி" என்ற பெயரில் எடப்பாடி தரப்பு வேட்பாளரை களம் இறக்கியுள்ளது. அதோடு, ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி போன்ற கூட்டணி கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அந்த பேனரில் இடம்பெற்று இருந்த நிலையில், மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. இதனால், பாஜக உடனான கூட்டணியை ஈபிஎஸ் அணி முறித்துக்கொண்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி செல்லும் அண்ணாமலை:
ஈபிஎஸ் தரப்பு செயல்பாடு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியபோது, எடப்பாடி பழனிசாமி அணியின் செயல்பாட்டுக்கு உரிய நேரத்தில் பதில் தரப்படும் என்று கூறினார். இந்த சூழலில் இன்று அவர் டெல்லி சென்று, பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதைதொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு:
ஈபிஎஸ் அணி - பாஜக இடையேயான பரபரப்பான சூழலுக்கு மத்தியில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அப்போது தனது அணி சார்பிலான வேட்பாளரை அவர் அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈபிஎஸ் அணி தரப்பு புறக்கணித்ததை தொடர்ந்து, பாஜக ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கான பணிக்குழுவை அறிவித்த ஓபிஎஸ், பாஜக வேட்பாளரை அறிவித்தால் அவ்ருக்கு அதரவு அளிப்போம், இல்லையெனில் தனித்து போட்டியிடுவோம் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

