"போலீஸை தாக்கும் தைரியம் இனி யாருக்கும் வரக்கூடாது" பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்.. கொதித்தெழுந்த இபிஎஸ்
அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி மீதான தாக்குதலுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தின்போது பெண் டி.எஸ்.பி காயத்ரி மீது சிலர் கும்பலாக சூழ்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பெண் டிஎஸ்பி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண் டி.எஸ்.பி காயத்ரி மீது தாக்குதல்:
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரியை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த விடியா திமுக அரசுக்கும், பொம்மை முதலமைச்சருக்கும் கடும் கண்டனம்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரி அவர்களை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) September 3, 2024
விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது…
"இந்த தைரியம் இனி யாருக்கும் வரக்கூடாது"
அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரியை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், காவல்துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் விடியா திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது டிஎஸ்பி காயத்ரி அவர்களை தடுக்க முயன்றதால், டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தியதால் போலீசார் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டு பதட்டமான சூழல் நிலவியது.