ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
அதிமுக-வினர் தொடர்ந்து தவெக-வில் இணைந்து வரும் சூழலில், இதைத் தடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழ்மட்ட தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மொத்த அரசியல் களத்தையும் தமிழ்நாட்டில் மாற்றியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளால் மிக அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அதிமுக ஆகும். எம்ஜிஆர், ஜெயலலிதா எனும் இரு பெரும் ஆளுமைகளால் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத கட்சியாக உள்ள அதிமுக-வின் இன்றைய நிலை அந்த கட்சியின் தொண்டர்களுக்கு வேதனையை உண்டாக்கியுள்ளது.
தவெக-வில் கூடாரம் அடிக்கும் அதிமுக:
திமுக-வுடன் ஆட்சியமைக்க முயற்சித்தது, கட்சியை வலிமைப்படுத்த தவறியது என பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் எடப்பாடி பழனிசாமி பல நெருக்கடிக்கு ஆளாகி வருகிறார். கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலரும் அதிமுக-வில் இருந்து விடைபெற்று தவெக-வில் ஐக்கியமாகி வருகின்றனர்.
தேர்தலுக்கு முன்பு செங்கோட்டையன் சென்றபோதே பலரும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தனர். தற்போது, தவெக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகு அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்களான வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எம்சி சம்பத், வைகைச் செல்வன் என ஒரு பெரிய பட்டாளமே அந்த பக்கம் இணைந்துவிட்டனர்.
தாவ தயாராக உள்ள சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி:
மாவட்ட அளவில் அதிமுக தற்போது மிகவும் பலவீனமாக உள்ளது. குறிப்பாக, 6 எம்எல்ஏ-க்கள் அதிமுக-வில் இருந்து தவெக பக்கம் தாவியிருப்பது எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. மேலும், அதிமுக-வின் முக்கிய தலைவர்களான எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகமும் அதிமுக-வில் இருந்து விலக இருப்பதாகவும் தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. அவர்களின் செயல்பாடுகளும் அதையே உணர்த்தும் விதமாகவே உள்ளது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்திலே இருந்து வந்த அதிமுக தற்போது போட்டியிலே இல்லாத ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டது. இது அதிமுக-வினர் மத்தியில் மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற இடைத்தேர்தலும், உள்ளாட்சித் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் அதிமுக-வின் தாக்கம் அதில் எதிரொலிக்குமா? அல்லது போட்டியே இல்லாத ஒரு கட்சியாக மாறிவிடுமா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி திட்டம் என்ன?
இதனால், கட்சியை வலிமைப்படுத்தி கட்சியில் இருந்து விலக தயாராகும் மன நிலையில் உள்ள நிர்வாகிகளையும், இரண்டாம் கட்ட தலைவர்களையும் சமாதானப்படுத்தவும் எடப்பாடி பழனிசாமியை பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைக்கு தற்போது வரை எடப்பாடி பழனிசாமி செவி சாய்க்க மறுத்துவருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலை நீடித்தால் திமுக - அதிமுக என்று இருந்து வந்த போட்டி, திமுக - தவெக என்றே நிரந்தரமாக மாறும் சூழல் ஏற்பட்டு விடும் என்றும் அதிமுக-வின் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனால், கட்சியை மறுகட்டமைக்க எடப்பாடி பழனிசாமி மிகுந்த தீவிரம் காட்டுவதுடன் அனைவருடனும் இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















