Ramraj Cotton: ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் விளம்பர தூதரானார் ரிஷப் ஷெட்டி!
Ramraj Cotton: பிரபல ஆடை உற்பத்தி நிறுவனமான ராம்ராஜ் காட்டனின், விளம்பர தூதராக கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளார்.
Ramraj Cotton: நடிகர் ரிஷப் ஷெட்டி தங்களை போன்றே பாரம்பரியத்தை விரும்பும் நபர் என, ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராம்ராஜ் நிறுவனத்துடன் கைகோர்த்த ரிஷப் ஷெட்டி:
காட்டன் வேட்டி, சட்டைகள் மற்றும் குர்தா விற்பனையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்ராஜ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் பல முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து தங்களது, பொருட்களை விளம்பரப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தங்களது வியாபாரத்தை தேசிய அளவில் விரிவு செய்யும் நோக்கில், காந்தாரா படத்தின் மூலம் தேசிய அளவில் புகழ்பெற்ற ரிஷப் ஷெட்டியுடன் ராம்ராஜ் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், பிரபல நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் நாங்கள் இணைந்துள்ளோம் என்பதையும், அவர் எங்கள் வேட்டிகள், சட்டைகள் மற்றும் குர்தாக்களை அங்கீகரிக்கும் எங்களது பிராண்ட் அம்பாசிடராக இருப்பார் என்பதையும் உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி” என ராம்ராஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரம்பரியத்தை விரும்பும் ரிஷப் - ராம்ராஜ்:
”ரிஷப் ஷெட்டி நடிகர் என்பதோடு மட்டுமின்றி, தனது கலாசாரத்தை கொண்டாடும் நபராகவும், பாராம்பரியத்தால் பெருமை கொள்ளும் நபராகவும் இருக்கிறார். தான் கலந்துகொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கூட, பாரம்பரியமான வேட்டியையே அணிந்து செல்வார். இதுவும் அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்திற்கான காரணங்களில் ஒன்றாகும். பாரம்பரிய பொருட்களை பயன்படுத்துவது மற்றும் கொண்டாடுவதில், ராம்ராஜ் நிறுவனம் மற்றும் ரிஷப் ஷெட்டியின் எண்ணங்கள் ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், ரிஷப் ஷெட்டி உடனான இந்த பயணம் மூலம், தென்னிந்தியாவில் இருந்து வட இந்தியாவிற்கும் எங்களது வணிகத்தை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும் என நம்புகிறோம்” என ராம்ராஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிஷப் ஷெட்டி பெருமிதம்:
ராம்ராஜ் நிறுவனத்துடன் சேர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார். அதன்படி, ”ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் சேர்ந்து பயணிப்பது எனது பெருமை. வீடுகளிலும், நமது ஊர் நிகழ்வுகளிலும் நாம் காட்டன் வேட்டிகள் மற்றும் சட்டைகளையே அதிகம் பயன்படுத்துகிறோம். காட்டன் வேட்டி மற்றும் சட்டை போன்ற பாரம்பரிய ஆடைகளை நாம் வீடுகளில் அணிவது போன்று, மற்ற இடங்களிலும் அணிந்து நம்மை நாமாகவே அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ராம்ராஜ் நிறுவனம் தந்துள்ளது. முதன்முதலில் ராம்ராஜ் நிறுவனத்தை பார்த்தபோது, இது ஒரு பெரிய பிராண்டாக வரும் என நினைத்தேன். ஆனால், இன்று இந்திய கலாசாரத்தின் அடையாளமாக பெரும்பாலானோர் ராம்ராஜ் ஆடைகளை பயன்படுத்தி வருகின்றனர். தென்னிந்தியாவில் இது ஒரு பெரிய பிராண்டாக உருவெடுத்துள்ளது. இதேபோன்று, நாடு முழுவதிலும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஒரு பெரிய பிராண்டாக வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். உள்நாட்டை சேர்ந்த ஆடை நிறுவனம் என்பதை கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இந்நிறுவனத்தை ஆதரிக்க வேண்டும்” என ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.