Actor Bala Free Ambulance: மீண்டும் மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் .. நடிகர் பாலாவின் செயலால் நெகிழும் ரசிகர்கள்..!
இந்த வருடத்திற்குள் பத்து ஆம்புலன்ஸ்களை மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் வழங்க உள்ளேன் என பாலா கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது முறையாக மலை கிராமத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக சின்னத்திரை நடிகர் விஜய் டிவி பாலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கிய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி சின்னத்திரை காமெடி தொடரில் பிரபலமானவர் நடிகர் பாலா, ஆதரவற்ற முதியோர்கள். ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்ட காப்பாகங்கள் நடத்தி வருவதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு கொடுத்து வருகிறார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறந்தாங்கி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல் முறையாக ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலை கிராமத்தில் உட்பட்ட குன்றி மலைப்பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மலை கிராம மக்கள் பயன்படுத்தும் விதமாக ரூபாய் 10 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் சேவையினை நடிகர் விஜய் டிவி பாலா தன்னுடைய சொந்த செலவில் வழங்கினார்.
இதே போல் தொடர்ந்து மலைகளின் மக்கள் தேவைக்கு ஏற்ப வழங்குவது என தெரிவித்திருந்த பாலா, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பகுதிக்கு உட்பட்ட சோழகனை மலை கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் நடிகர் பாலா தன்னுடைய சொந்த செலவில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சோழகனை மலை கிராம மக்கள் பயன்படுத்தும் விதமாக மேலும் அதே பகுதியில் 24 மணி நேரமும் நிறுத்தி வைக்கும் விதமாகவும் சிறிய ரக ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை பர்கூர் மலை கிராமத்திற்கு உட்பட்ட சோழகனை மலை கிராமத்தில் வழங்கினார்.
இது குறித்து அப்பகுதி மலை கிராம மக்கள் கூறுகையில், சோழகனை மலை கிராமத்தில் இருந்து பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதற்கு 20 கிலோமீட்டர் தொலைவு இருப்பதாகவும். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மருத்துவ வசதிக்காக கர்ப்பிணிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி தூக்கி செல்லும் அவல நிலை இருந்து வந்ததாகவும். இது குறித்து மலை கிராம மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த தன்னார்வலர் அமைப்பான உணர்வுகள் அமைப்பு சார்பில் நடிகர் பாலாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக ரூபாய் 5 லட்சம் ரூபாய் செலவில் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கி தருவதாக பாலா தெரிவித்தார். இதையடுத்து சோழகனை மலை கிராம மக்கள் பயன்பாட்டிற்காக ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி மலை கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் பாலா மற்றும் நடிகர் அமுதவாணன், தன்னார்வலர் அமைப்பை சேர்ந்த மக்கள் ராஜன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் மற்றும் மலை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பாலாவின் சொந்த செலவில் மலை கிராமத்தை சேர்ந்த 125 விவசாயிகளுக்கு., மண்வெட்டி, கடற்பாரை, கூடை உள்ளிட்ட வேளாண் உபகரணங்களும் வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக மலை கிராம மக்கள் தங்களது பாரம்பரிய இசை வாசித்தும் நடனமாடியும் நடிகர் பாலா வழங்கிய ஆம்புலன்சை உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாலா, பலர் தன்னை விமர்சித்து வந்தாலும் கூட நான் எந்த விமர்சனங்களையும் உட்படுத்தாமல் மக்கள் பணியாற்றுவேன். இந்த வருடத்திற்குள் பத்து ஆம்புலன்ஸ்களை மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் வழங்க உள்ளேன். எந்த செயலை செய்தாலும் விமர்சனங்கள் வரத்தான் செய்யும் அதை பொருட்படுத்தாமல் நாம் நமது செயலில் மட்டுமே நோக்கமாக இருந்து மக்களுக்கு உதவ வேண்டும் எனவும் தெரிவித்தார்.