ABP Southern Rising Summit 2023: எறியப்படும் கற்களை வைத்து கோட்டை எழுப்புவேன்.. - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
“நாங்கள் மாற்றங்களாக நினைப்பது, சிலருக்கு அரசியல் நகர்வுகளாக தோன்றலாம். ஆளுநருக்கு இருக்கும் சிக்கல் இது” - தமிழிசை சௌந்தரராஜன்
ஏபிபி-யின் ”தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான ”ABP Southern Rising Summit” கருத்தரங்கு இன்று (அக்.12) சென்னையில் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளும் அரசியல்வாதிகளும் சினிமா, அரசியலில் பெண்களின் பங்கு மற்றும் 2024 மக்களவை பொதுத் தேர்தல் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
கேள்வி: ஆளுநர் என்பவர் யார்? மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக இருப்பவரா அல்லது மத்திய அரசு சொல்வதை மாநிலத்தில் நிறைவேற்றுபவரா?
பதில்: நல்ல கேள்வி. ஆளுநர் என்பவர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மட்டும் பாலமாக இருப்பவர் அல்ல. மக்களுக்கும் பாலமாக இருப்பவர். பாசமாகவும் இருப்பவர். பாசமாக இருப்பது தான் மோசமாக மற்றவர்களால் விமர்சிக்கப்படுகிறது. ஆளுநர் என்பது அரசியலமைப்பு சட்டத்தில் காலம்காலமாக இருக்கிறது. அவர்களுக்கென்று சில விதிமுறைகள், கடமை இருக்கிறது. ஆனால் அவர்கள் நான்கு சுவற்றுக்குள் இருக்க வேண்டும். அரிதாகதான் வெளியே தெரிய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நாங்கள் சொல்வதற்கெல்லாம் ரப்பர் ஸ்டேம்ப் போல் கையெழுத்து போட்டு அனுப்பவேண்டும் என்ற எண்ணம் இருப்பது தவறு. ஏனென்றால் ஆளுநர்கள் என்பவர்கள் ஸ்பீட் ப்ரேக்கர் போல், அவை நம்மை விபத்தில் இருந்து காப்பாற்ற தானே, தவிர தடையாக இருக்கிறது என்று கூற முடியாது. ஸ்மூத்தாக போங்க என்று விட்டால் எங்கேயாவது போய் வண்டி இடித்துவிடும்.
ஆளுநருக்கு எதற்காக கோப்புகள் அனுப்பப்படுகின்றன? அதை அலசி ஆராய்ந்து சட்டத்துக்கு உட்பட்டதாக, இல்லையா என ஆராய்ந்து அதை திருப்பி அனுப்புவதற்கும், இருக்கிறது என்றால் கையெழுத்து இடுவோம்.
கேள்வி: ஆளுநர் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டுமா அல்லது எது சரி, எது தவறு என்று பகுத்தறிந்து முடிவெடுக்க வேண்டுமா?
பதில்: அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு எது சரி, எது தவறு என்று முடிவெடுக்க வேண்டும்.
கேள்வி: ஒருவேளை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழ்நாடு ஆளுநராக இருந்திருந்தால், நீட் விலக்கு மசோதா அல்லது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாக்களுக்கு எப்படி முடிவெடுத்து இருப்பீர்கள்?
பதில்: நீட் விலக்கு மசோதா என்பது உச்ச நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. தமிழ்நாடு ஆளுநராக மட்டுமில்லாமல் ஒரு மருத்துவராகவும் வேறுமாதிரி நான் முடிவெடுத்திருப்பேன். ஏனென்றால் நான் தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியாக இருந்திருக்கிறேன். அரசு மருத்துவக் கல்லூரியில் படித்திருக்கிறேன்.
ஆக, அரசு கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் எப்படி திறமையில் மாற்றம் இருக்கிறது என்பதைத் தெரிந்து நான் முதலில் இருந்தே ஆதரிக்கிறேன். ஒரு மருத்துவராக ஆதரிக்கும்போது என்னை கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால் மருத்துவர் என்ற முறையில் நீட் தேவை என்றே நான் சொன்னேன். அப்படியே முடிவெடுத்திருப்பேன்.
ஆன்லைன் சட்ட மசோதா, அரசியலமைப்பு சட்டத்தின் படி அது மத்தியப் பட்டியலில் இருக்கிறதா அல்லது மாநில பட்டியலில் இருக்கிறதா எனும் சர்ச்சை இருக்கிறது. மத்தியப் பட்டியலில் இருக்கும்போது அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். எனவே நான் அவர்களுக்கு அனுப்பி இருப்பேன்.
நான் மக்களுக்காக ஆளுநராக தான் செயல்பட்டு வருகிறேன். நாங்கள் மாற்றங்களாக நினைப்பது, சிலருக்கு அரசியல் நகர்வுகளாக தோன்றலாம். ஆளுநருக்கு இருக்கும் சிக்கல் இது. ஆளுநர்கள் பொறுப்பு மிக்கவர்கள். அவர்கள் எதிர்க்கப்படவேண்டியவர்கள் அல்ல.
எதிர்கட்சியாக இருக்கும்போது ஆளுநர் தேவைப்படுகிறார். ஆளுங்கட்சியாக இருக்கும்போது தேவைப்படுகிறாரா? ஆளுநர்களை சந்திப்பதையே முதலமைச்சர்கள் தவிர்க்கிறார்கள். அரசியலை மிஸ் பண்றேன். ஆனால் ஆளுநர் பதவி மூலம் மக்களுக்கு உதவும் இடத்தில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது . என் மீது எறியப்படும் கற்களை வைத்து கோட்டை எழுப்புவேன்” எனப் பேசியுள்ளார்.