Aadi Amavasai Special Bus: ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்கப் போறீங்களா? சிறப்பு பேருந்துகள் ரெடி - முன்பதிவு செய்வது இப்படித்தான்!
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாள் ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாசம் ஆன்மீக ரீதியாக மிகவும் சக்திவாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் அமாவாசை நாள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆடி அமாவாசை:
நடப்பாண்டிற்கான ஆடி அமாவாசை நாள் வரும் 24ம் தேதி வருகிறது. வரும் வியாழக்கிழமை ஆடி அமாவாசை நாள் வருகிறது. பொதுவாக ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவது இந்து மதத்தை பின்பற்றுபவர்களிடம் பழக்கமாக உள்ளது. இதனால், அன்றைய நாளில் முன்னோர்களுக்கு புண்ணிய நதிகளில் தர்ப்பணம் செய்வது பக்தர்களின் வழக்கம் ஆகும்.
சிறப்பு பேருந்துகள்
பொதுவாக, ஆடி அமாவாசை நாளில் ராமேஸ்வரம் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம் செய்ய குவிவார்கள். இதனால், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட உள்ளது. இதன்படி, வரும் 23ம் தேதி புதன்கிழமை சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம். - அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல்.#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC @sunnewstamil | @PTTVOnlineNews |… pic.twitter.com/mS3DUYcAEe
— ArasuBus (@arasubus) July 21, 2025
அதேபோல, ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் மீண்டும் அவரவர் சாெந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக 24ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
முன்பதிவு செய்வது எப்படி?
ஆடி அமாவாசைக்காக தர்ப்பணம் செய்ய ராமேஸ்வரம் செல்ல விரும்பும் பக்தர்கள் www.tnstc.in என்ற அதிகாரப்பூர்வ தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழக இணையதளத்திலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் செல்போன் செயலிகள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.
சிறப்பு பேருந்துகளின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக அந்தந்த நகர பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பண்டிகைகள், விழாக்கள், தொடர் விடுமுறை உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்குவதை தமிழ்நாடு அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது ஆடி அமாவாசைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஆடி அமாவாசை நாளில் ராமேஸ்வரம் மட்டுமின்றி கடற்கரை, ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அளிப்பார்கள். காவிரி நதிக்கரையிலும் அன்றைய நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம் அளிப்பார்கள்.





















