சைபர் அறிவியல், கணினி அறிந்த 203 காவலர்கள்! கண்காணிப்பில் சோஷியல் மீடியா! டிஜிபி ப்ளான் என்ன?
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 9 பெரிய நகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்களைக் கொண்ட இந்த குழுவிற்கு பெயர் சமூக ஊடகக் குழு என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களில் தவறான, பொய்யான தகவல்களை பரப்புவோரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சமூக ஊடக் குழுக்களை அமைத்து, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
எதற்காக இந்த குழு?
'போஸ்ட் ட்ரூத்' கலாச்சார வாழ்வியல் முறையில் நாம் நகர்ந்துவிட்டதாக நிபுணர்கள் சில ஆண்டுகளாகவே கூறி வருகின்றனர். பொய்யை பரப்புவதையே கொள்கையாக கொண்டவர்கள் வெற்றி பெறுவதே இதன் இலக்கணம். அதன்படி நாம் அனுதினம் சமுக வலைதளங்களில் தவறான, பொய்யான தகவல்களை பரப்புவதை ஒரு யுக்தியாகவே ஒரு சிலர் கடைபிடித்து வருகின்றனர். பெரும்பாலும் இவை அரசாங்கங்களை எதிர்த்தும், சமூக ஒற்றுமையை எதிர்த்தும் செயல்பட மக்களை தூண்டுகின்றன. பொய்யான பதிவுகளை வெளியிட்டு தவறான தகவல்களை பரப்பும் நபர்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து தடுக்கவும் அவர்களது கணக்குகளை முடக்கவும் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த குழு துரிதமாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதன் மூலம் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்தும் கூட்டத்தை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம் சாதி, மத அரசியல் மோதல்களைத் தடுத்திடவும் இக்குழு உதவும் என்றும் டிஜிபி கூறியுள்ளார்.
சைபர் மற்றும் கணினியில் தேர்ந்த காவலர்கள்
சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் இந்த குழு இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி சார்ந்த திறன், சைபர் தடய அறிவியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் பொய் பரப்புவோர்
டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், யூ-டியூப், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பொய்யானத் தகவல்களை பதிவிட்டு, வதந்திகளை பரப்பி அதன் மூலம் சமுகத்தில், மக்களிடையே குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும் ஏற்படுத்தும் நபர்களை இது கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
203 அதிகாரிகள் கொண்ட குழு
அதுமட்டுமின்றி காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களையும் கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என டிஜிபி தெரிவித்துள்ளார். தற்காகலத்தில் இவை மட்டுமன்றி இணைய வழி பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் விற்பனை, பண மோசடி போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரையும் எளிதில் கண்டுபிடிக்க தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 9 பெரிய நகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு பெயர் சமூக ஊடகக் குழு என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.