Election Special Train: நாளை வாக்குப்பதிவு: இன்று சென்னையிலிருந்து நெல்லை மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்..
மக்களவை தேர்தல் முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து நெல்லை மற்றும் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாளை ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருக்கும் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த ஒரு மாத காலமாக அரசியல் கட்சிகள் தரப்பில் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. நேற்று மாலை 6 மணிக்கு தேர்தல் பரப்புரை முடிவடைந்தது. மேலும் தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் தேர்தல் ஆணையம் தரப்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள், மதுபானம், விலை உயர்ந்த ஆபரணங்கள் ஆகியவை பறக்கும் படை மற்றும் சோதனை சாவடிகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடிகளில் மக்கள் சிரமம்மின்றி வாக்குப்பதிவு செய்ய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
நாளை வாக்குப்பதிவு என்பதால் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பில் 10,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல், சிறப்பு ரயில்களும் இன்று முதல் இயக்கப்படுகிறது.
தாம்பரம் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் சிறப்பு ரயில்:
அந்த வகையில் இன்று சென்னை தாம்பரம் முதல் கன்னியாகுமரி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06001) ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 04.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.40 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு ரயில் (06002) ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை எழும்பூர் முதல் கோவை வரை செல்லும் சிறப்பு ரயில்:
மேலும் சென்னை எழும்பூர் முதல் கோவை வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வண்டி எண்: 06003 சென்னையிலிருந்து ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மாலை 04.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.20 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும். மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06004) ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து இரவு 08.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.