A.R.Rahman: நாகூர் தர்காவுக்கு ஆட்டோவில் வந்திறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்.. சந்தனம் பூசும் விழாவில் பங்கேற்பு
ஏ.ஆர்,ரஹ்மான், எளிமையான முறையில் ஆட்டோவில் வந்திறங்கியது அங்கிருந்தோரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467ஆவது ஆண்டு கந்தூரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த டிச.15ஆம் ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கி கந்தூரி விழா நடைபெற்று வரும் நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர். ஆண்டுதோறும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைக் கலைஞர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர்.
ஆட்டோவில் வந்திறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
நாகூர் ஆண்டவர் எனப் போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மதம் கடந்து லட்சக்கணக்கானோர் ஆண்டுதோறும் கலந்துகொண்டு சிறப்பிக்கு இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறுகிறது.
இந்நிலையில் நாகூர் தர்காவின் கந்தூரி விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்,ரஹ்மான், எளிமையான முறையில் ஆட்டோவில் வந்திறங்கியது அங்கிருந்தோரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
யாரும் எதிர்பாராத வகையில் ஆட்டோவில் ரஹ்மான் வந்திறங்கிய நிலையில், அவர் தர்காவுக்குள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். நாகூர் தர்காவின் முக்கிய நிகழ்வான ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் விழாவில் கலந்துகொள்வதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் வருகை தந்துள்ளார்.
இதேபோல் சென்ற ஆண்டு கந்தூரி விழாவிலும் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், இதேபோன்று சந்தனம் பூசும் வைபவத்தின்போது தான் தர்காவுக்கு வருகை தந்தார். தீவிர இறை நம்பிக்கையாளரான ஏ.ஆர்.ரஹ்மான் நாகூர் தர்காவுடன் தனி பிணைப்பினைக் கொண்டு அடிக்கடி வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
நாகூர் தர்காவின் 467ஆவது ஆண்டு கந்தூரி விழா - ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு https://t.co/wupaoCzH82 | #ARRahman #NagoreDargah #Nagore @arrahman pic.twitter.com/wZzUe9AmHp
— ABP Nadu (@abpnadu) December 24, 2023
ஆளுநர் வருகை
இதேபோல் நேற்று (டிச.23) கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த விழாவில் கலந்துகொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்ட நிலையில், “பாரதத்தின் உயரிய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை பழமை வாய்ந்த இந்த தர்கா பிரதிபலிக்கிறது. 467ஆவது கந்தூரி திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்” என தர்காவின் குறிப்பேட்டில் எழுதினார்.
மேலும், தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் துயருற்ற மக்கள் நலனுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி பிரார்த்தனை செய்ததாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆளுநர் வருகைக்கு கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: Salaar Review: எடுபட்டதா சலாரின் சாகசம்? தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா பிரபாஸ்? முழு விமர்சனம் இதோ!