Pugar Petti:ஓமலூர் அரசு மருத்துவமனையில் கழிவறை அருகே சிகிச்சை பெரும் ஆண் நோயாளிகள்!
இரண்டு மாடி கட்டிடத்தை ஆண்கள் சிகிச்சை பிரிவாக மாற்ற வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தாரமங்கலம் நகராட்சி, ஓமலூர், காடையாம்பட்டி, கருப்பூர் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் 67 கிராம ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நாள் ஒன்றிற்கு 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு சுமார் ஐந்து கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்றடுக்கு மருத்துவ கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் பிரசவ வார்டும், முதல் தளத்தில் அருவை அரங்கமும், இரண்டாம் தலத்தில் பெண்கள் பிரிவும் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பெண்கள் பிரிவாக செயல்பட்டு வந்த இரண்டு மாடி கட்டிடம், தற்போது மருத்துவ அலுவலர் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.
அதனால், நீண்ட காலமாக ஆண்கள் பிரிவிற்கு கட்டிடம் இல்லாமல், இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய ஓட்டு கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. அங்கு நோயாளிகள் சிகிச்சை பெற வசதி இல்லாமல் கழிவறை அருகேயும் மருத்துவமனை தரையிலும் படுத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நோயாளிகளுடன் இருப்பவர்கள் மரத்தடியில் படுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஓமலூர் மருத்துவர் அலுவலகம் வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இதனிடையே இரண்டு அடுக்கு கட்டிடம் தற்போது வரை காலியாகவே உள்ளது. சுமார் நூறு நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் இரண்டு மாடியில் பெரிய கட்டிடமாக இருந்தும், இதில் ஒரு அறையில் மட்டும் மருத்துவ அலுவலர் அலுவலகமாக மாற்றி பயன்படுத்தி வருகிறார். அவருக்காக தனி அறை ஒதுக்கப்பட்டும், இதுவரை அந்த அறையை காலி செய்யாமல் இருந்து வருவதால், அந்த கட்டிடம் தற்போது பயனற்று கிடைக்கிறது.
எனவே உடனடியாக மருத்துவ அலுவலர் அலுவலகத்தை அவரது அறைக்கு மாற்றி, இரண்டு மாடி கட்டிடத்தை ஆண்கள் சிகிச்சை பிரிவாக மாற்ற வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பழைய ஓட்டு கட்டியத்தில் எந்த வசதியும் இல்லாமல் நோயாளிகள் அவதிக்கப்பட்டு வருவதால், கொசுக்கடி மற்றும் கழிவறை அருகே சிகிச்சை பெரும் சூழல் உள்ளது. இதனாலேயே பல்வேறு தொற்று நோய்கள் உருவாக வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து ஆண்கள் பிரிவாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.