75வது சுதந்திர தினவிழா: கரூரில் கல்லூரி மாணவிகள் தேசிய கொடியை கையில் ஏந்தி ஊர்வலம்
கரூர் ஆசாத் சாலையில் அமைந்துள்ள பூங்காவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் தனியார் மகளிர் கல்லூரியின் சார்பில் காந்தியடிகளின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கரூரில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் மற்றும் 200 கல்லூரி மாணவிகள் மூவர்ண கொடியை கையில் ஏந்தியவாறு வந்தே மாதரம் கோசமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தயாராகி வருகின்றன. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆசாத் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் தனியார் மகளிர் கல்லூரியின் சார்பில் தேசத்தந்தை காந்தியடிகளின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் 200 கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.
பூங்காவில் இருந்து தொடங்கிய ஊர்வலமானது, சுபாஷ் சந்திர போஸ் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், ஜவகர் பஜார் வழியாக, மனோகரா கார்னர் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதும், அங்கிருந்து புறப்பட்டு திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரும் மூவர்ண கொடியை கையில் ஏந்தியவாறு வந்தே மாதரம் கோசமிட்டபடி சென்றனர். கல்லூரி மாணவிகளின் எழுச்சிமிகு 75 ஆவது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேரணி நிகழ்ச்சியை அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூர்ந்தனர்.
அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என கலெக்டர் தகவல்
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆம் ஆண்டினை கொண்டாடிடும் வகையில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா அனைத்து ஊர்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைவரின் மனதிலும் தேசம், சுதந்திரம் அடைந்ததன் பெருமிதத்தை உணர்த்தும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்னும் மாபெரும் இயக்கத்தினை, இந்திய அரசு தொடங்கியுள்ளது.
இதன்படி வருகிற 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தேசிய கொடியினை அனைத்து வீடுகளிலும் ஏற்றி, இந்திய சுதந்திர தினத்தையும் அதற்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் நினைவில் கொள்ளும் விதமாக, கரூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலமாக தரமான தேசிய கொடி தயார் செய்யப்பட்டு, கொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்றியும் சுதந்திர தின விழாவினை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்