Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?
Dindigul Hospital: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
Dindigul Hospital: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தனியார் மருத்துவமனையில் தீ விபத்து:
திண்டுக்கல் நேருஜி நகர் திருச்சி சாலையில், ரயில்வே மேம்பாலம் அருகே, சிட்டி மருத்துவமனை எனப்படும் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. தரைதளத்திற்கு மேலே 4 மாடிகளை கொண்டு இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதன்படி, தரைத்தளத்தில் வரவேற்பு அறை, முதல்தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, இரண்டாவது தளத்தில் அறுவை சிகிச்சை பிரிவு உள்ளது. மூன்றாவது தளத்தில் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட, கடைசி தளத்தில் மருத்துவமனை ஊழியர்கள் தங்கும் அறைகள் இருக்கின்றன. இந்தநிலையில் தான் நேற்று இரவு 9 மணி அளவில் மருத்துவமனை வரவேற்பு அறையில் திடீரென பலத்த சத்தம் எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து அங்கு தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.
தப்பிக்க முயன்ற நோயாளிகள்:
மளமளவென தீ சிறிதுநேரத்தில் தரைதளம் முழுவதும் பரவியது. இதனை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதனால் தரை தளத்தில் பற்றிய தீ மேல் தளங்களுக்கு வேகமாக பரவியது. ஒவ்வொரு தளமாக பரவிய தீ 4 தளங்களுக்கும் பரவ, எல்லா தளங்களிலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. மருத்துவமனையின் 4 தளங்களுக்கும் கரும் புகைமூட்டம் பரவியது. இதையடுத்து அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பதறி துடித்தனர். தங்களது உயிரை காப்பாற்றி கொள்ள மருத்துவமனையில் இருந்து வெளியேறும் நோக்கில் அங்கும் இங்கும் ஓடினர். அவர்கள் உள்ளே இருந்து எழுப்பிய கூக்குரல்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் வெளியே நின்றபடி கதறி அழுத நிகழ்வுகள் காண்போரை மனமுடைய செய்தது.
BIG BREAKING: A fire broke out at City Private Hospital on the #Dindigul-Trichy road, claiming seven lives, including a young boy and three women, and leaving over 20 injured. pic.twitter.com/L9XsiFwUrv
— Shakil Aqthar A (@Shakilaqthar) December 12, 2024
6 பேர் உடல் கருகி பலி
தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொள்ள, இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்தன. உயிர் தப்பிக்க நோயாளிகள் மற்றும் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆபத்தறியாமல் லிஃப்ட் வழியாக கீழே இறங்க முயன்றனர். ஆனால் அவர்கள் லிஃப்ட்டுக்குள் சிக்கி கொண்டனர். லிஃப்டை உடைத்து தீயணைப்பு படைவீரர்கள் அவர்களை மீட்டனர்.
இதனிடையே, திண்டுக்கல் பால திருப்பதி பகுதியைச் சேர்ந்த மணி முருகன் பலியானார். அவருக்கு உதவியாக வந்த அவரது தாய் மாரியம்மாள், மூன்று வயது குழந்தை உட்பட 7 பேர் தீயில் கருகி இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 20-க்கும் மேற்பட்டோர்திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் என்ன?
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கலெக்டர் பூங்கொடி, மாவட்ட எஸ்.பி., பிரதீப் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியை முடுக்கி விட்டனர். கணினியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.