டெல்டா விவசாயிகளுக்காக குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் : முதல்வரின் அறிவிப்பு சொல்வது என்ன?
டெல்டா விவசாயிகளுக்காக குறுவை நெல் சாகுபடித் தொகுப்பு திட்டத்தை ரூபாய் 61.09 கோடி மதிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறந்து வைத்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் உயர்மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், முக்கிய இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கும் வகையில் ரூபாய் 61.09 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்து ஆணையிட்டுள்ளார்.
இந்த குறுவை சாகுபடி உதவி தொகுப்பு திட்டமானது, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் முழுவதும் மற்றும் கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் செயல்படுத்தப்படும். காவிரி டெல்டா மாவட்டங்களில் முதல்வரின் உத்தரவின்படி, சிறப்புக்கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் மேட்டூர் அணை திறப்பு குறித்து, பல்வேறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை கலந்தாலோசித்து, டெல்டா மாவட்டங்களில் ரூபாய் 65.11 கோடி மதிப்பீட்டில், 4,061.44 கி.மீ. தூரத்திற்கு 647 தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
கடந்த 11-ஆம் தேதி திருச்சி, கல்லணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து, பின்னர் 12-ஆம் தேதி குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் திறந்து வைத்தார். கல்லணையில் இருந்து 16-ஆம் தேதி காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் நேற்றைய நிலவரப்படி, 94.26 டி.எம்.சி. தண்ணீர் இருப்பில் உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தொடர்ந்து காவிரியில் மாதந்தோறும் உரியளவில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென, காவிரிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் முதல்வர், மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினார். அதன்படி, வரும் 22-ந் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்காக 3.2 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். நடப்புக்குறுவைப் பருவத்தில் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு, குறுவை சாகுபடிக்குத் தேவையான குறுகிய கால நெல்ரக விதைகள், ரசாயன உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போன்ற இடுபொருட்களை போதிய அளவில் இருப்பில் வைத்திடவும், நெல் நடவு இயந்திரங்களை கொண்டு விரைவாக நடவுப்பணியை மேற்கொள்ளவும் வேளாண்மைத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய முன்னேற்பாடு நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த 14-ந் தேதி வரை 1 லட்சத்து 69 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் நாற்றாங்கல் விடும் பணியும் நடைபெற்று வருகிறது.
டெல்டா விவசாயிகள், குறுவைப் பருவத்தில் அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக 2 ஆயிரத்து 870 மெட்ரிக் டன் சான்று நெல் விதைகள், 1 லட்சத்த 90 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முழு மானியத்தில் ரசாயன உரங்கள், 24 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பசுந்தாளுர விதைகள் போன்ற இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படும்.
இதற்காக அரசு ரூபாய் 50 கோடி நிதியையும், வேளாண் இயந்திரங்களையும் மானியத்தில் விவசாயிகளுக்ககு வழங்கவும், நீரைத் திறம்பட சேமித்து பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தும் வகையில், பண்ணைக்குட்டைகள் அமைக்கவும் ரூபாய் 11.9 கோடி நிதியையும் வழங்கி மொத்தம் 61.09 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தினால், 2 லட்சத்து 7 ஆயிரத்து 259 விவசாயிகள் பயன் அடைவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : Rohini Compliant Against Kishor | ரகுவரன் குறித்து இழிவான பதிவு - கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகிணி புகார்