ICT Awards | தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 6 பேருக்கு மத்திய அரசு விருது : யார் யார் தெரியுமா?
6 ஆசிரியர்களும், கல்வி பயிற்றுவித்தலில் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தத் தேசிய விருது பெறவிருக்கின்றனர் . இதற்கான அறிவிப்பை மத்தியக் கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 6 பேருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 6 ஆசிரியர்களும், கல்வி பயிற்றுவித்தலில் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தத் தேசிய விருது பெறவிருக்கின்றனர் . இதற்கான அறிவிப்பை மத்தியக் கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
பொதுவாகவே அரசுப் பள்ளி என்றால் வசதி குறைவு என்ற காலம் இப்போது மாறிவிட்டது. அரசுப் பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் வெகுவாக ஆர்வம் காட்டிவருகின்றனர். அரசுப் பள்ளியை தரம் உயர்த்தினால் ஆட்சியைக் கூட கட்சிகள் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதற்கு டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி ஒரு சாட்சி. அந்தவகையில், தமிழகத்தில் அரசுப் பள்ளியின் நிலவரம் குறிப்பிடத்தக்க அளவுக்கு தரம் உயர்ந்து வருகிறது என்றே சொல்லலாம். அப்படியாக ஆசிரியர்களும் கற்பித்தலில் தங்களை லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துக்கு தகவமைத்துக் கொண்டு வருகின்றனர்.
2010 முதல் விருது..
கடந்த 2010-ம் ஆண்டு முதல், மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. கல்வி கற்பிப்பதில் தகவல் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு இந்த ஐசிடி விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் என்சிஇஆர்டி சார்பில் இந்த விருது விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விருதுக்காக ஒவ்வொரு மாநிலமும் ஆசிரியர்களை தேர்வு செய்து என்சிஆர்டிக்கு பரிந்துரைக்கும். அந்த வகையில் தமிழகம் இந்த ஆண்டு 6 ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்து பரிந்துரைத்தது. தமிழகத்தின் பரிந்துரையிலிருந்து 3 ஆசிரியர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2018, 2019 என இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் 6 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2018-ம் ஆண்டுக்கான விருது பெறும் ஆசிரியர்களின் விவரம் வருமாறு:
1.கணேஷ், கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருவாரூர் மாவட்டம். இவர் கணினி வாயிலாக கணிதம் கற்பிப்பவர்.
2.தயானந்த், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர் மாவட்டம். இவர் மாணவர்களுக்காக 170-க்கும் மேற்பட்ட அனிமேஷன் வீடியோக்களை உருவாக்கியவர்.
3.மனோகர் சுப்பிரமணியம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி,கரூர் மாவட்டம். இவர் க்யூஆர் குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை தயாரித்து மாணவர்களை அதைப் பயன்படுத்தப் பழக்கி கவனம் ஈர்த்தவர்.
2019-ம் ஆண்டுக்கான விருது பெறும் ஆசிரியர்களின் விவரம் வருமாறு:
1. தங்கராஜா மகாதேவன், பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம். இவர், சூழலியல் சார்ந்த பாடங்களை அனிமேஷன் வீடியோக்கள் மூலம் கற்பித்து கவனம் ஈர்த்தவர்.
2. இளவரசன், வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம். இவர், தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 22 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் தன் மாணவர்களை உரையாட வைத்தவர்.
3. ஜெ.செந்தில் செல்வன், மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை மாவட்டம். இவர் ஜாமென்ட்ரி, கிராஃப் உள்ளிட்ட கணிதப் பாடங்களை பவர்பாயிண்ட்மூலம் மாணவர்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்த்தவர்.
இந்த ஐசிடி விருதுகள் தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்கு ஈடானவை என்பது குறிப்பிடத்தக்கது.