மெரினா கடற்கரை நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!
சென்னை மெரினா அண்ணா நீச்சல் குளத்தில் உயிரிழந்த 5 வயது சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
CM Stalin: சென்னை மெரினா அண்ணா நீச்சல் குளத்தில் உயிரிழந்த 5 வயது சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த 5 வயது சிறுவன்:
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நீச்சல் குளத்திற்கு விளையாட தனது குடும்பத்தினருடன் 5 வயது சிறுவன் நேற்று வந்துள்ளார். வார இறுதி நாட்கள் என்பதால் அங்கு அதிக அளவில் கூட்டம் இருந்தது. அப்போது, அந்த சிறுவன் நீச்சல் குளத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் நீச்சல் குளத்தின் ஆழமான பகுதிக்கு சிறுவன் சென்றுள்ளான். அப்போது, மூச்சு திணறி தண்ணீரில் உயிரிழந்துள்ளான். நீண்ட நேரம் சிறுவன் வெளியே வராததால் அவர்களது பெற்றோர்கள் அங்கு இருப்பவர்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.
நீண்ட நேரமாக தேடிய பிறகு, சிறுவனை நீச்சல் குளத்தில் இருந்து மீட்டுள்ளனர். உடனே சிறுவனின் பெற்றோர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நீச்சல் குளத்தில் மூச்சு திணறி உயிரிழந்த சிறுவன் அனிருத் என்று அடையாளம் காணப்பட்டதோடு பள்ளிக்கரனையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிவாரணம் அறிவித்த முதல்வர்:
சென்னை நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/OG7SuKNqg5
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 27, 2023
இந்நிலையில், உயிரிழந்த 5 வயது சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல்குளத்தில் நேற்று (26-7-2023) மதியம் குடும்பத்தினருடன் நீந்துவதற்கு வந்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அனிருத் என்ற ஐந்து வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
சிறுவனின் இறப்பு குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளேன். சிறுவன் அனிருத்தை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க