CM Stalin - Khadija Bivi: 33 ஆண்டுகால பணி, 10000 பிரசவங்கள்.. செவிலித்தாய் கதீஜாவை வாழ்த்தி வழியனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு அரசில் 33 ஆண்டுகாலமாக செவிலியராக பணியாற்றி 10 ஆயிரத்திற்கும் அதிகமான பிரசவம் பார்த்த, கதிஜா பீவி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரை முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசில் 33 ஆண்டுகாலமாக செவிலியராக பணியாற்றி 10 ஆயிரத்திற்கும் அதிகமான பிரசவம் பார்த்த, கதிஜா பீவி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரை முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துப் பதிவு:
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “33 ஆண்டுகளுக்கு முன்பு தான் கருவுற்றிருந்த நிலையில் செவிலியராகப் பணிக்குச் சேர்ந்த கதீஜா பீவி அவர்கள், தனது பணிக்காலத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களில் பங்களித்து இன்று ஓய்வுபெறுகிறார். தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புக்கும் அனைத்து மருத்துவப் பணியாளர்களின் பெருந்தொண்டுக்கும் அடையாளச் சின்னமாக இவரது பணி அமைந்திருக்கிறது. பத்தாயிரம் பிள்ளைப்பேற்றுக்குத் துணைபுரிந்து பல குடும்பங்களில் மகிழ்ச்சியை விதைத்த 'செவிலித்தாய்' கதீஜா பீவி அவர்களுக்கு எனது நன்றி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்து, அவரது ஓய்வுக்காலம் நிறைவானதாகத் திகழ்ந்திட வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
33 ஆண்டுகளுக்கு முன்பு தான் கருவுற்றிருந்த நிலையில் செவிலியராகப் பணிக்குச் சேர்ந்த கதீஜா பீவி அவர்கள், தனது பணிக்காலத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களில் பங்களித்து இன்று ஓய்வுபெறுகிறார்.
— M.K.Stalin (@mkstalin) June 30, 2023
தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புக்கும் அனைத்து மருத்துவப் பணியாளர்களின்… pic.twitter.com/ys528GlwHC
யார் இந்த கதீஜா பீவி..!
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கதிஜா கடந்த 1990ம் ஆண்டில், ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது விழுப்புரம் மாவட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு செவிலியர் பணிக்குச் சேர்ந்தார். தனக்குக் குழந்தை பிறந்த இரண்டே மாதங்களில் மீண்டும் பணிக்கு திரும்பினார். செவிலியர் பயிற்சி முடித்திருந்தாலும், பணிக்குச் சேர்ந்த சில நாட்களில், தானே குழந்தை பெற்றெடுத்த அனுபவம் அவருக்கு மேலும் கைகொடுத்தது. கதீஜா பீவியின் தாயார் ஜுலைகா கிராமப்புற சுகாதார செவிலியராகப் பணியாற்றிவர் என்பதால், சிறுவயது முதல் செவிலியர் வேலை குறித்த ஆர்வம் கதீஜாவிடம் இருந்தது.
7 கிராம மக்களுக்கு சிகிச்சை:
1990களில் ஏழு கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் பரபரப்பான இடமாக ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது என்று நினைவு கூருகிறார் கதீஜா. 30 ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறு செவிலியராகப் பணியாற்றிய கதீஜா, தனது பணிக்காலத்தில் அதிகபட்சமாக ஒரு மாதத்தில் 35 பிரசவங்கள் வரையும், குறைந்தபட்சம் ஐந்து பிரசவங்கள் வரையும் பார்த்துள்ளார். ஒரே நாளில் எட்டு பெண்மணிகளுக்குப் பிரசவம் பார்த்தது உணர்வுப்பூர்வமான அனுபவத்தையும் அவர் பெற்றுள்ளார்.
கவுரவித்த முதலமைச்சர்:
இதுவரை 50க்கும் மேற்பட்ட இரட்டைக் குழந்தைகள் மற்றும் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்த பிரசவங்களைக் கையாண்ட அனுபவத்தைப் பெற்றுள்ளார் கதீஜா. இத்தகைய பல சேவைகளில் ஈடுபட்ட அவரை, அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கதீஜா பீவியின் சேவையைப் பாராட்டி விருது வழங்கி கவுரவித்தார். இந்நிலையில் தான், 60 வயதான கதீஜா தான் பணிக்கு சேர்ந்த அதே சுகாதார நிலையத்தில் செவிலியர் சேவையை முடித்துக் கொண்டு ஓய்வு பெற்றுள்ளார்.