MK Stain: திமுக ஓராண்டு கால ஆட்சி. சொன்னதும்... செய்ததும்..! மு.க.ஸ்டாலின் பெயர் சொல்லும் திட்டங்கள் ஓர் அலசல்!
மு.க.ஸ்டாலின், ”எங்களுக்கு ஓட்டுப் போடாதவர்களை, ஏன் ஓட்டுப்போடவில்லை என்று வருத்தப்பட வைக்கும் அளவிற்கு ஆட்சி இருக்கும்.” என்று பேசியிருந்தார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. கடந்தாண்டு பதவி ஏற்றதும், மு.க.ஸ்டாலின், ”எங்களுக்கு ஓட்டுப் போடாதவர்களை, ஏன் ஓட்டுப்போடவில்லை என்று வருத்தப்பட வைக்கும் அளவிற்கு ஆட்சி இருக்கும்.” என்று பேசியிருந்தார். இந்த ஓராண்டில் அவருடைய சொல், செயல்வடிவம் பெற்றிருக்கிறதா? தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? இத்தனை ஆண்டுகால திமுக ஆட்சி வரலாற்றில், மு.க.ஸ்டாலின் தன் பாணியில் முன்னெடுத்த திட்டங்கள் என்னென்ன? அவரின் சிறப்பான ஆட்சிக்கு பெயர் சொல்லும் அளவிலான நிகழ்வுகள் என்ன? இவைகளை பற்றி அலசுகிறது இக்கட்டுரை.
இந்த ஓராண்டு கால ஆட்சி மு.க.ஸ்டாலின் பெயர் சொல்லும் அளவிற்குதான் அமைந்திருக்கிறது எனலாம். ஏனெனில், அதற்கு சாட்சியாக பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆட்சியைப் பிடித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களுக்கு அதிருப்தி ஏற்படாத வகையில் வகையில் ஆட்சி செய்திருக்கிறார் என்றே சொல்லலாம். இந்த ஓராண்டில் சட்டப்பேரவையிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் ஏராளம். கடந்த காலங்களில் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது. ஆனால், இப்போது அறிவிப்புகளை வெளியிட்டதோடு அதை முடிந்த வரை செயல்படுத்தவும் மெனக்கெட்டிருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், ஆட்சிப் பொறுப்பேற்று குறுகிய காலத்திலேயே வாக்குறுதிகளாகச் சொன்னவற்றில் 505க்கும் மேறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது அரசு என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 தொகையை தேர்தலில் வெற்றிபெற்றதும் முதல் கையெழுத்தாக இரண்டு தவணைகளாக கொடுத்தார். மகளிருக்கும், திருநங்கைக்கும் இலவசப் பேருந்து வசதி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்தது, விவசாய நகைக்கடன் தள்ளுபடி பால் விலை குறைப்பு, பெட்ரோலுக்கான விலையைக் குறைத்தது, வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல், இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைத்தல், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் அரசே ஏற்பு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறையின் சார்பில் வழங்கப்படும் வீடுகள் இனி குடும்ப தலைவிகளின் பெயரில்தான் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, 5 சவரனுக்கு மிகாமல் வைக்கப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்தது எல்லாம் மிக முக்கியமானவை.
இப்படியான அறிவிப்புகள் தான் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்ததற்கான அடிப்படையானவை என்றே சொல்லாம். அடுத்ததாக பல நூறு ஆண்டுகள் பழமையான சென்னை மாநகராட்சியின் மேயராக யார் பொறுப்பேற்பார் என்று பல யூகங்கள் வெளியான நிலையில் அதை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினருக்கு ஒதுக்கி, அதில் ஒரு இளம்பெண்ணை அமர வைத்தது தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும்.
பல சமூக நீதித் திட்டங்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்திய கலைஞர் கருணாநிதிாயலேயே செயல்படுத்த முடியாத அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது மட்டுமல்லாமல், பயிற்சி முடித்த அரச்சகர்களுக்கு பணியை வழங்கியதும், பெண் ஒருவரை ஓதுவாராக நியமித்ததெல்லாம் இந்த அரசின் சாதனைகளாக வரலாறு சொல்பவைகள். இத்திட்டங்களெல்லாம் இந்தியா பார்த்திராத ஒன்று.
கல்வியின் முக்கியத்துவத்தை உணந்த அரசாக, கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக பள்ளியின் வாசலையே மிதிக்காமல் இருந்த மாணவர்களுக்கு எந்த அளவிலும் கற்றல் குறைபாடு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், விடுபட்டதை நிரப்பும் விதமாக அறிவிக்கப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டம், மருத்துவமனைக்கு வரமுடியாத முதியவர்கள், கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அறிவிக்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் எல்லாம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரனமான திட்டங்களாக திகழ்கின்றன.
இதோடு மட்டுமல்லாமல், நீட் தேர்வுக்கு எதிராக இரண்டு முறை தீர்மானம் இயற்றியது, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கேட்பதில் உறுதியாக இருப்பது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம், துணை வேந்தர்களை முதலமைச்சரே நியமனம் செய்யலாம் என்று தீர்மானம், மாநில அரசின் உரிமைக்காக தீர்மானம், மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வினை எதிர்த்து தீர்மானம், போன்றவைகள் கடந்த கால ஆட்சியாளர்கள் கூட செய்யத் துணியாதவை. மேலும், ஆளுநருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறது தற்போதைய அரசு.
இது மு.க.ஸ்டாலினின் தனி வழி!
தி.மு.க. அரசு நெருக்கடியான சூழலில்தான் பொறுப்பேற்று கொண்டது. கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்த காலக்கட்டம். அதை சமாளிப்பதற்கே அரசிற்கு முதல் மூன்று மாதங்கள் தேவைப்பட்டது. ஆனாலும், கொரோனா காலத்தில் அரசின் செயல்பாடுகள் சிறப்பாகவே அமைந்தது. அதற்கடுத்தது, மு.க.ஸ்டாலின் முன் இருந்த சவால் பெருமழை வெள்ளத்தை கையாள்வது. சென்னை தொடர்ந்து சந்தித்து வரும் பெருவெள்ள பிரச்சினைக்கு தீர்வாக, வெ.திருப்புகழ் ஐஏஎஸ் தலைமையில் குழுவை அமைக்கப்பட்டது. மாநிலத்தின் பொருளாதார நிலமையை சரி செய்ய அரசுக்கு ஆலோசனை வழங்க ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஷான் த்ரே, அரவிந்த் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் மாநில வளர்ச்சி குறித்து திட்டமிட தனது தலைமையின் கீழ், பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோரை இணைத்து மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவை அமைத்தார். சமூகநீதி அளவுகோல் சட்டப்படி முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக சுப.வீரபாண்டியன் தலைமையில் சமூகநீதி கண்காணிப்புக் குழு, மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க முதல்வரை தலைவராக கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு என்று மாநில வளர்ச்சிக்கு முக்கியமான பல்வேறு திட்டங்களை அறிமுக செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு, துறை நிபுணர்களை திட்டக்குழுவில் இணைத்ததுதான் சிறப்பு.
இப்படி, இந்த ஓராண்டிற்குள் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்தவைகள் ஏராளம். பட்டியல் நீளும். அதில் முக்கியமானவைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. அழாத பிள்ளைக்கும் பால் கொடுக்கும் தாயாய் இந்த அரசு இருக்கும் என்று சட்டப்பேரவையில் கூறினார் ஸ்டாலின். சொன்னதோடு மட்டுமல்லாமல் அப்படி தான் எல்லா தரப்பு மக்களுக்குமான ஆட்சியும் நடத்துகிறார் என்று கூறுகின்றனர் விமர்சகர்கள். குறிப்பாக நம்மிடம் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதையும் அதை எப்படி தீர்ப்பது என்பதையும் தெரிந்தே செயல்படுகிறார்.
தற்போதைய நிலையில் இந்தியாவில் பல்வேறு வகைகளில் முன்மாதிரி மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு. இதே வேகத்தில் சென்றால் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது போல நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்பது நிதர்சனம்.
மு.க.ஸ்டாலின் ஓராண்டு கால ஆட்சி முடிந்திருக்கிறது. இன்னும் மீதி இருக்கும் ஆட்சி காலத்திலும் மக்களுக்கான அரசாக இருக்குமா என்ற கேள்விக்கான பதிலுக்கு நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.
ஓராண்டில் மு.க.ஸ்டாலின் மாஸ் காட்டிய சம்பப்வங்கள் வீடியோவைக் காண இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.