Tsunami Day: சூறாவளியாய் சுழட்டி எடுத்த சுனாமி...! 18 ஆண்டுகளாகியும் துடைக்க முடியாத துயரம்: இன்று நினைவு தினம்...!
கடல் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. பறந்து விரிந்த இதன் அழகை காண கண்கோடி வேண்டும் என்பார்கள். பலருக்கும் கடல் அதிசயமாக தெரியும் நிலையில் மீனவர்களுக்கு அது அன்னை மடியாக தெரியும்.
தமிழகத்தில் இன்று சுனாமி தாக்குதலின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பலரும் சுனாமியில் இறந்துபோனவர்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடல் என்னும் ஆபத்து
கடல் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. பறந்து விரிந்த இதன் அழகை காண கண்கோடி வேண்டும் என்பார்கள். பலருக்கும் கடல் அதிசயமாக தெரியும் நிலையில் மீனவர்களுக்கு அது அன்னை மடியாக தெரியும். அப்படியான கடல் அலைகள் எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை செய்திகள் பார்த்திருப்போம். கதைகளில் கேட்டிருப்போம். ஆனால் நிஜத்தில் நம் கண் முன் அந்த ஆபத்தை கண்டால், அதன் தாக்கம் பலதலைமுறைகளுக்கு இருக்கும் என்பதற்கு உதாரணம் 18 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நிகழ்ந்த ‘சுனாமி என்னும் ஆழிப்பேரலை தாக்குதல்’
சுனாமி தாக்குதல்
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடியிருந்த பலருக்கும் தெரிந்திருக்காது. அடுத்த நாள் மிகப்பெரிய துயர சம்பவம் நடக்கும் என்று. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும். அப்படித்தான் டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் சுமார் 30 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பலமாக தாக்கியது. என்ன நடக்கிறதே என தெரியாமல் திக்குமுக்காடி உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பிக்க நினைத்த மக்களும், தூக்கத்தில் இருந்த பலரும் கடல் அலையின் பிடியில் சிக்கி மாண்டு போயினர். சுமார் 2,29,866 பேர் இறந்து போனதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 43,786 பேர் காணாமலே போயினர்.
மறக்க முடியாத சோகம்
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் சுனாமி தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்த நிலையில், அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6,065 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் உயிரிழந்தார்கள். உயிர்ப்பலி ஒருபுறமிருக்க மறுபுறம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பொருட்சேதம் ஏற்பட்டது.
கடலோரத்தில் எழுந்த அந்த மரண ஓலம் என்றைக்கும் தமிழக மக்களால் மறக்க முடியாது. பெற்றோர்,குழந்தைகள், உறவினர்கள் என சொந்தங்களை இழந்தவர்களுக்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அந்த வடு மறையாது. அன்றைக்கு அந்த துயர சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு பலரும் அடுத்த தலைமுறை உறவுகள் சகிதம் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
17 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் இன்று 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்று கடலோரப் பகுதியில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்துவார்கள். உண்மையில் சுனாமி நிகழ்வுக்குப் பின் பலருக்கும் கடல் மேல் இருந்த எண்ணமே மாறிவிட்டது என்றே சொல்லலாம்.