Crime : ராஜஸ்தான் ஊழல் தடுப்பு குழுவிடம் சிக்கிய தமிழ்நாடு போலீசார்... திருட்டு நகைகளை மீட்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி...
திருட்டு நகைகளை மீட்க ராஜஸ்தான் சென்ற திருச்சி தனிப்படை போலீசார் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா விளக்கமளித்துள்ளார்.
திருட்டு நகைகளை மீட்க ராஜஸ்தான் சென்ற திருச்சி தனிப்படை போலீசார் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா விளக்கமளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தன், ராம் பிரசாத், சங்கர், ராமா ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வந்து தங்கியுள்ளனர். இவர்கள் சாலையோரங்களில் தங்கி கொண்டு பலூன் விற்பது போலவும், பெட்ஷீட் வியாபாரம் செய்வது போலவும், போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுத்து கொண்டும் வாழ்ந்து வந்துள்ளனர். அதேசமயம் இவர்கள் தண்டவாளங்களை ஒட்டியுள்ள வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து 254 பவுன் தங்கம், ஒரு கிலோ வெள்ளி நகைகள் திருடப்பட்ட வழக்கில் 4 பேரும் கடந்தாண்டு டிசம்பர் 23 ஆம் தேதி திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட நகைகள் ராஜஸ்தான் கொண்டு சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து இவர்களில் ரத்தன், சங்கர் ஆகிய 2 பேரை மட்டும் காவலில் எடுத்து உதவி காவல் ஆணையர் கென்னடி தலைமையில் உறையூர் ஆய்வாளர் மோகன், உதவி காவல் ஆய்வாளர் உமாசங்கரி உட்பட 15 பேர் கொண்ட தனிப்படை போலீசார் கடந்த 28 ஆம் தேதி ராஜஸ்தான் சென்றனர்.
பின்னர் மார்ச் 2 ஆம் தேதி உள்ளூர் போலீசார் உதவியுடன் கன்சியாம் என்பவரிடம் இருந்து 300 கிராம் தங்கம், ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் திருட்டு நகைகளை வாங்கும் மற்றொரு நபரான அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்த சானியா, அவரது கணவர் பண்ணாலால் ஆகியோர் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் 100 பவுன் நகைகளை திரும்ப கொடுப்பதாக ஒத்துக் கொண்டார். ஆனால் இவர்கள் நகைகளை கொடுப்பதில் காலதாமதம் செய்தனர்.
இதற்கிடையில் தனிப்படை போலீசார் மீண்டும் திருச்சி செல்ல முடிவெடுத்த நிலையில், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த அவர்களை சானியாவின் அண்ணன் லட்சுமணன் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது திருடப்பட்ட நகைகளுக்கு பதிலாக ரூ.25 லட்சம் கொடுப்பதாக தெரிவிக்க, இதனை நம்பிய தனிப்படை போலீசார் அஜ்மீருக்கு சென்றுள்ளனர். அதேசமயம் குற்றவாளிகள் இருவருடன் உதவி காவல் ஆணையர் கென்னடி உள்ளிட்ட சிலர் திருச்சி வந்தனர்.
அஜ்மீருக்கு பணம் வாங்க சென்ற தனிப்படை போலீசாரை ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்புக் குழு அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் தான் தமிழ்நாடு போலீசார் தங்களை பணம் கேட்டு மிரட்டுவதாக மாநில ஊழல் தடுப்புக் குழுவிடம் லட்சுமணன் பொய் புகார் அளித்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக உயர் அதிகாரிகள் ராஜஸ்தான் மாநில போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தி தனிப்படை போலீசார் 12 பேர் விடுவிக்க வைத்தனர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யப்பிரியா, திருச்சியில் குற்றங்களை தடுக்க 1000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய நிலை உள்ளதாகவும், அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.