100 Days of DMK Govt: தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உள்ள உறவு எப்படி இருக்கிறது?
36.6 சதவீத வாக்காளர்கள், மு.க ஸ்டாலின் தலைமையிலானம் முதல் 100 நாட்களில், மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் சிறப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுக்கும்- மத்திய அரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் சுமாரான அளவில் இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த சட்டபேரவைத் தேர்தலில் வாக்களித்த 4,516 வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை சிவோட்டர் குழுமத்துடன் இணைந்து ஏபிபி நாடு செய்தி நிறுவனம் வெளியிட்டது.
கடந்த 100 நாட்களில் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் கீழ், மத்திய - மாநில அரசின் இருதரப்பு உறவுகள் எப்படி இருந்தது?
சிறப்பு | சரசாரி | மோசம் | பதில் இல்லை | மொத்த எண்ணிக்கை | |
அதிமுக + பாஜக கூட்டணி | 50.2% | 28.0% | 12.9% | 8.9% | 100.0% |
திமுக + காங்கிரஸ் கூட்டணி | 27.7% | 51.5% | 11.7% | 9.1% | 100.0% |
அமமுக | 34.5% | 27.3% | 23.6% | 14.5% | 100.0% |
மக்கள் நீதி மய்யம் | 24.4% | 31.7% | 12.2% | 31.7% | 100.0% |
நாம் தமிழர் | 24.4% | 33.7% | 23.8% | 19.8% | 100.0% |
இதர கட்சிகள் | 26.3% | 31.6% | 22.8% | 19.3% | 100.0% |
மொத்தம் | 36.4% | 39.8% | 13.4% | 10.4% | 100.0% |
'ஏபிபி நாடு' செய்தித்தளம் நடத்திய ஆய்வின் படி, 36.6 சதவீத வாக்காளர்கள், மு.க ஸ்டாலின் தலைமையிலானம் முதல் 100 நாட்களில், மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் சிறப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளனர். இருதரப்பு உறவுகள் சராசரியாக இருப்பதாக 39% வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு தெரிவித்ததில், 51% பேர் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் மோசமடைந்துள்ளதாக 13.4% வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய - மாநில இருதரப்பு உறவுகள்:
வரலாற்று பின்னணி: இந்தியாவில், முதலாளித்துவம் (Capitalism), பொதுவுடைமை (Communism), சமூகவுடமை (Socialism) போன்ற கருத்தியியல் கோட்பாடுகளின் அடிப்படையில் கூட்டாச்சித் தத்துவம் கற்பனை செய்யப்படவில்லை. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் கூட்டாச்சி முறை, தனிமனித சுதந்திரதை பேணிக் காக்கும் அரசியல் தத்துவமாக பார்க்கப்படுகிறது.
உதாரணமாக, 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதி மாநிலங்கள் நிலவும் அடிமைமுறையினை ஒழிப்பதற்காக கூட்டாச்சித் ததத்துவத்தை அமெரிக்கா முன்னெடுத்தது. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் அரச கட்டமைப்பை வலுப்படுத்தும் கருவியாக மட்டுமே கூட்டாச்சி பார்க்கப்படுகிது.
திராவிட அரசியல் வலியுறுத்தும் கூட்டாச்சி முறை என்ன? திமுகவின் அரசியலில் மாநில சுயாட்சி என்பது மிக முக்கியமான வாதம். இந்தியாவின் வளர்ச்சிக்கான மைய நீரோட்டத்தில் அனைவரையும் இணைப்பதற்காக மாநில சுயாட்சியை திமுக பயன்படுத்துகிறது. உதாரணமாக, 1969 காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டு காமராஜர் தலைமையில் நிறுவன காங்கிரஸ் என்றும் இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரசு என்று செயல்பட்டது. அப்போது, வங்கிகளை தேசியமயமாக்குதல், தனியுரிமை பணப்பை (privy purse) ஒழித்தல், சொத்துரிமையை நீக்குதல் போன்ற திட்டங்களுக்கு திமுக நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தது. நாடு முழுவதும், பொதுவுடைமை, மதச்சார்பின்மை சிந்தனையை கொண்டு சென்றதில் திமுகவுக்கு அதிக பங்குண்டு.
1950ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் பின்பற்றபட்ட ஜாதிவாரி இடஒதுக்கீட்டு முறை தான், பின்னாளில் தேசம் முழுவதும் பின்பற்றப்பட்டது (மண்டல் கமிஷன் ). ஆகஸ்ட் 1990ல் மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்று பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீட்டை திமுக அங்கம் வகித்த தேசிய முன்னணி அரசு அறிவித்தது.
நாட்டிலேயே முதன்முறையாக, 1971-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. மேலும், காவலர்களின் நலன்களைப் பாதுக்காக்க கோபால்சாமி ஐயங்கார் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும், மத்திய மாநில உறவுகளை ஆராய நாட்டிலேயே முதன் முறையாக பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது.
2021 கல்வியாண்டு முதல் மருத்துவ/ பல்மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, இட ஒதுக்கீடு வழங்கும் என்று மத்திய அரசு முன்னதாக அறிவித்தது. இதற்கு, தமிழ்நாடு அரசியல் கட்சிகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைவரும் அறிந்ததே. எனவே, மாநில சுயாட்சி என்ற பெயரில் திமுக தன்னை தனிமைப் படுத்திக் கொள்ளவில்லை. மாறாக, தேசிய அரசியல் பாதையை செதுக்கியதில் திமுக முக்கிய பங்குதாராக உள்ளது.
தமிழ்நாடு அரசியலில் மத்திய அரசின் பங்கு: தமிகத்தில் வேரூன்றியிருக்கும் திராவிட கட்சிகளை பிளவுபடுத்த மத்திய அரசின் மேற்கொண்ட நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிட முடியாது என மூத்த பத்தரிகையாளர் ஏ.எஸ் பன்னீர்செல்வம் குறிப்பிடுகிறார். தமிழ்நாடு அரசியலில் பெரும் பிளவை ஏற்படுத்திய முக்கிய தலைவர்கள் அனைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே இருந்திருக்கின்றனர்.
உதாரணமாக, 1961ல் அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து பிரிந்து சென்று தமிழ் தேசியக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிய ஈ. வெ. கி. சம்பத்; எம். ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்குவதற்கு முக்கிய உந்துதல் சக்தியாக இருந்த நாஞ்சில் மனோகரன்; எம். ஜி.ஆர் மறைவுக்குப் பின், அதிமுகவை பிளவுபடுத்திய ஜெ. ஜெயலலிதா; திமுகவிலிருந்து நீக்கப்பட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய வைகோ; அதிமுகவில் இருந்து விலகிய சசிகலா புஷ்பா எனப் பட்டியல் நீள்கிறது. கூட்டாச்சி அரசியலில் இந்த அரசியல் கோணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுவாதாகவும் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் தெரிவிக்கிறார்.