பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 300 பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதிப்பு.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் நோக்கமாகவே 300 பொருட்களுக்கான இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்துள்ளது.
சர்வதேச நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 300 நுகர்வு பொருட்களுக்கு இலங்கை அரசு தடை விதித்திருப்பதாக அறிவித்துள்ளது. அந்நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் ,உணவு, மருந்து, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து ,மக்கள் வாழ வழியின்றி வீதிகளில் இறங்கி இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். இந்த தொடர் மக்கள் போராட்டம் மிகப்பெரும் புரட்சியாக மாறி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அமைச்சர் பொறுப்புகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபாய ராஜபக்ச வெளி நாட்டுக்கு தப்பி சென்றார். இதனை அடுத்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் 21-ந் தேதி பொறுப்பேற்றார்.
சர்வதேச நிதியம்:
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை இலங்கை அரசு நாடி வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது வரை நடந்து கொண்டிருக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இலங்கை சென்று தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை உத்தரவை இலங்கை அரசு பிறப்பித்திருக்கிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் நோக்கமாகவே ,இந்த பொருட்களுக்கான இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசு விளக்கமளித்துள்ளது.
இந்த 300 பொருட்களில், சாக்லேட்,ஷாம்பூ, வாசனை திரவியங்கள், கொக்கோ மற்றும் பதப்படுத்தப்பட்ட பால், உள்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நுகர்வு பொருட்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக அனுப்பப்பட்டிருக்கும் பொருட்களே இறுதியானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு முன்பு கப்பலில் ஏற்றப்பட்டு செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் இலங்கைக்கு வந்து சேரும் பொருட்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
தடைவிதிப்பு:
இந்த 300 பொருட்களுக்கான தடை உத்தரவை நிதி அமைச்சரும், இலங்கையின் அதிபருமான ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டு அரசிதழில் வெளியிட்டு இருக்கிறார். மேலும் இந்த தடை செய்யப்பட்ட பொருட்களில் வெண்ணெய், கொழுப்பு நீக்கப்பட்ட பால், தயிர், சுவையூட்டப்பட்ட பழங்கள், பருப்புவகைகள் , முக சவரத்திற்கு பயன்படுத்தப்படும் க்ரீம்,முக அழகுசாதனப் பொருட்கள்,ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த தடை செய்யப்பட்ட பொருட்களில் பெண்கள் மற்றும் ஆண்களின் உள்ளாடைகள் மற்றும் பல வகையான ரெடிமேட் ஆடைகளும் அடக்கும் ஏற கூறப்படுகிறது.
அதேபோல் கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய பைப்புகள், டைல்ஸ் , அலுமினியம், கண்ணாடி பொருட்கள், போன்றவையும் குளிரூட்டிகள் ,எடையிடும் உபகரணங்கள் ,டிஜிட்டல் கேமராக்கள்,கேமரா பாகங்கள்,அச்சுப்பொறிகள்,வீடியோ கேமராக்கள்,மைக்ரோவேவ் ஓவன்கள், ரைஸ் குக்கர், மற்றும் சில மின்சாதன பொருட்கள் இலங்கை அரசு வெளியிட்டுள்ள இறக்குமதி தடை பட்டியலில் உள்ளடங்கியுள்ளன. ஏற்கனவே இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் விலைவாசி உயர்வு பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .ஒரு பக்கம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கை அரசு 300 பொருட்களுக்கான இறக்குமதியை தடை செய்திருக்கிறது.
1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மோசமான அந்நிய செலாவணி நெருக்கடியானது அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தியது.