Yercaud Flower Show: ஏற்காடு கோடை விழா கோலாகலமாக துவங்கியது
காலை முதலே குளிர்ச்சியான சூழல் ஏற்காட்டில் நிலவி வருவதால் குழந்தைகளுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏற்காட்டின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.

ஏற்காட்டில் 48வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 23 ஆம் தேதி நேற்று துவங்கி, 29ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைதொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த ஆண்டு நடைபெறும் ஏற்காடு கோடை விழா சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் 1.50 லட்சம் மலர்களைக் கொண்டு மலர்க்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறிக் கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, கோலப்போட்டி, படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. மேலும், நாய்கள் கண்காட்சி, இளைஞர்களுக்கான கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக 73 ஆயிரம் வண்ண ரோஜாக்களை கொண்டு மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போல வன உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் யானை, புலி, பாம்பு, குரங்கு, முயல் மான் உள்ளிட்ட உருவங்கள் 50,000 வண்ண வண்ண ரோஜா மலர்களைக் கொண்டு அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளை கவரும் வகையிலான கார்ட்டூன் கதாபாத்திரங்களான பிக்காச்சு, சார்மண்டர், போன்ற உருவங்களும் ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு பல்வேறு வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர்களைக் கொண்ட பூந்தொட்டிகள் கண் கவரும் வகையில் அண்ணா பூங்காவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று கோடை விழா மலர் கண்காட்சி துவங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, படகு இல்லம் ஆகிய இடங்களில் திரண்டு வருகின்றனர். காலை முதலே குளிர்ச்சியான சூழல் ஏற்காட்டில் நிலை வருவதால் குழந்தைகளுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏற்காட்டின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.
இவ்விழாவில் பேசிய வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ”தமிழ்நாடு முதல்வர் இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை விளங்கிடச் செய்யும் நோக்கில் எல்லாருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பான ஆட்சியினைச் செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாண்மையான பெண்கள் அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு தற்போது செல்கின்றனர். வனப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கென பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கருத்திற்கொண்டு குடிநீர் வசதி, நகரத்தின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையிலான சாலை வசதி மற்றும் பேருந்து வசதிகளை ஏற்படுத்தியுள்ளார்கள். சேலம் மாவட்டத்திற்கான பறவையாக 20,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்களால் இந்திய பாம்புத்தாரா என்னும் பறவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வனம் மற்றும் வனப்பகுதிகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு புதுமையான திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் பொதுமக்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், "தமிழ்நாடு முதல்வர் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் விவசாயிகளின் நலன் காத்திடும் வகையில் வேளாண்மைத்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையினைச் செயல்படுத்தி உள்ளார்கள். அதன்படி கடந்த ஆண்டுகளில் பல்வேறு உழவர் நலன் காக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். அதேபோன்று, தமிழ்நாடு முதல்வர் பிற மாநிலங்கள் வியந்து பாராட்டும் வகையில் பொற்கால ஆட்சியை வழங்கி வருகிறார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு 48வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி இன்றைய தினம் தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ளது. சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போன்று இந்த ஆண்டும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.





















