விவசாயிகள் பாதிக்காத வகையில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர வேண்டும் - அமைச்சர் கே.என்.நேரு
சேலம் மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்களுக்கான புதிய வாகனங்களை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் கடந்த 22.4.2022 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்களுக்கான புதிய வாகனங்கள் வாங்க அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக முதலவர் கடந்த 10.05.2023 அன்று தலைமைச் செயலகத்தில் சேலம் மற்றும் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கான இரண்டு புதிய வாகனங்கள் உட்பட 25 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 200 புதிய வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில், மீதமுள்ள பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், கொளத்தூர், நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், காடையாம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, கொங்கணாபுரம் மற்றும் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகர ஆணையாளர் பாலச்சந்தர், சேலம் வடக்கு, மேற்கு மற்றும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "சேலம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஒவ்வொரு இடங்களுக்கும் ஒப்பந்ததாரர்கள் மிகவும் குறைவு. பணிகள் முடித்து மீண்டும் சாலை அமைப்பதற்கு மூன்று முதல் நான்கு மாத காலம் எடுத்துக் கொள்கின்றனர். பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்த உடன் ஓரிரு நாட்களில் தற்காலிக சாலை அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாநகராட்சியில் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் புதிதாக முதலமைச்சர் தந்துள்ளார். பொதுமக்கள் பாதிக்காத அளவிற்கு அந்த பணிகளை செய்து முடிக்க அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக வந்து கொண்டிருக்கிறது. விவசாயம் பாதிக்காத வகையில் கர்நாடகா அரசு தண்ணீர் திறக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பெங்களூரில் மழை தொடங்கியுள்ளது. விவசாயிகள் பாதிக்காத வகையில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர வேண்டும் என்று நாங்களும் நினைக்கிறோம். இயற்கையின் ஒத்துழைப்புடன் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரவேண்டும் என்றார்.
சேலம் மாநகராட்சியில் கொட்டப்படும் குப்பைகளை எரிப்பதினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், எல்லா ஊர்களிலும் குப்பை என்பது ஒரு மாபெரும் பிரச்சனை. சென்னையில் குப்பைகளை தனியார் ஒப்பந்ததாரர்கள் வைத்து எடுத்து வருகிறோம். அதனை பயோமெட்ரிக் முறை மூலம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். நகராட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பல மாநிலங்களுக்கு சென்று பார்வையிட்டு வந்துள்ளனர். எனவே குப்பை எங்கு உள்ளதோ அங்கேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என வாங்குவதற்கு வாகனங்கள் வாங்கி கொடுத்துள்ளோம். எனவே அது தொடர் பிரச்சனை ஆனால் அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.