Thirumavalavan Case: திருமாவளவன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் வன்னியர் சமுதாயத்தை இழிவு படுத்தி பேசியிருந்தார்.
![Thirumavalavan Case: திருமாவளவன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒத்திவைப்பு The defamation case against VCK leader Thirumavalavan was adjourned to the 20th TNN Thirumavalavan Case: திருமாவளவன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒத்திவைப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/336c2243acb161dca008bdab274db2851686835633002113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் திருக்கோவில் மோதல் தொடர்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வன்னியர் சமுதாயத்தை இழிவு படுத்தியும் வழக்குரைஞர் பாலுவை தரக்குறைவாகவும் பேசியிருந்தார். விசிக தலைவர் திருமாவளவனின் பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. வன்முறையை தூண்டும் விதமாக பேசிய திருமாவளவனுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, விசிக தலைவர் திருமாவளவன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நான்கில் நேற்றைய முன்தினம் வழக்கு தொடுத்தார். வழக்கு தொடர்பான முதல் விசாரணை இன்று பிற்பகல் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவதூர் வழக்கினை விசாரிக்கும் நீதிபதி யுவராஜ், முதற்கட்டமாக கார்த்தியின் புகாரை நீதிமன்றத்தில் பதிவு செய்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வருகின்ற 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனிடையே வழக்கு தொடுத்த கார்த்தி, நீதிமன்றத்திற்கு வர உள்ளதால் நமது பலத்தை நிரூபிக்க விடுதலை சிறுத்தை கட்சியினர் நீதிமன்றத்தில் கூடுமாறு அச்சுறுத்தும் வகையில் விசிக நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாக இன்று காலை முதலே நீதிமன்ற வளாகத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வழக்கு விசாரணையின் போது வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்த போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்க உறுப்பினர்கள் நீதிமன்றம் முன்பு குவிந்ததால் சேலம் நீதிமன்றம் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, “விசிக தலைவர் திருமாவளவன் ஒட்டு மொத்தமாக வன்னியர் சமுதாயம் மனம் புண்படும் வகையிலும், பொதுவெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அந்த பதிவினை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளோம். அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம். அது இன்று விசாரணைக்கு சேலம் நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. வருகின்ற 20 ஆம் தேதி விசாரணைக்காக அழைப்பு ஆணை சொல்லி இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள வன்னியர்களை அவர் பேசிய வார்த்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு மனம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறோம்” என்று கூறினார். மேலும், “மேல்பாதி கிராமத்தில் இருப்பது தனிப்பட்ட நபர், அவரது தனிப்பட்ட இடத்தில் கட்டிய கோவில். இது இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில். தனியார் பட்டாவில் உள்ள கோவில். ஏற்கனவே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இந்த கோவில் தனிப்பட்ட நபருக்கு தான் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்” கூறினார். திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருப்பதால் நியாயம் கிடைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ”நாங்கள் நீதிமன்றத்தை நம்பி உள்ளோம். நீதிமன்றம் எங்களுக்கு நியாயம் வழங்கும் என்று நம்பிக்கையில் இருக்கிறோம்” என்று கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)