விவசாய தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் - விவசாய தொழிலாளர் சங்கம்
புதிய நிர்வாகிகளாக தலைவர் கணபதி, செயலாளர் சேகர், பொருளாளர் மாரிமுத்து, துணை தலைவர்கள் 4 பேர் துணை செயலாளர்கள் 4 பேர் உள்ளிட்டு 27 பேர் கொண்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டம் திருவாகவுண்டனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஆறாவது மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் சின்னராஜ் சங்க கொடியை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட துணை செயலாளர் சாமியப்பன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக தலைவர் கணபதி, செயலாளர் சேகர், பொருளாளர் மாரிமுத்து, துணை தலைவர்கள் 4 பேர் துணை செயலாளர்கள் 4 பேர் உள்ளிட்டு 27 பேர் கொண்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய மாநில துணைத் தலைவர் துரைசாமி, மாநாட்டில் 1996 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் கோலப்பன் ஐஏஎஸ் அவர்கள் பரிந்துரைத்த விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் நல வாரியம் அமல்படுத்தப்பட்டு இப்போது தனி வாரியம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது, தமிழக அரசு விவசாய தொழிலாளர்களுக்கு தனி நல சட்டம் அமைத்து வாரியம் அமைக்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஒன்றிய அரசால் தற்போது சிதைக்கப்பட்டு வருவதாகவும், திட்டத்தின் வேலை நாட்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைந்துள்ளது. இதனால் கிராம புற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. எனவே கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும் தினக்கூலி 600 ரூபாயும் வழங்க வேண்டும் என்று கூறினார்.
தமிழக அரசு 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி 300 ரூபாய் வழங்க வேண்டும். கிராமப்புற வேலையை அனைவருக்கும் வழங்குவோம் என கூறிய தமிழக அரசு ஒன்றரை ஆண்டுகளாக எதுவும் செய்யாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒரு ஆண்டிற்கு நூறு கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கி 37 ஊராட்சிகளில் மட்டுமே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவு படுத்தி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைவருக்கும் வீட்டுமனைகள் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க சிறப்பு சட்டம் ஏற்ற வேண்டும். வரும் தமிழக பட்ஜெட்டில் இது குறித்த அறிக்கை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் முதியோர் ஓய்வூதியம் 60 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் மேட்டூர் உபரி நீரை அனைவரும் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்த வேண்டும். நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். நகர்ப்புற வேலை உறுதி திட்டத்திற்கு தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செயல்படுத்த வேண்டும் நவம்பர் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் வீட்டுமனை மற்றும் மனை பட்டா கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.