‘என்னிடம் வார்டு உறுப்பினர் எப்படி கேள்வி கேட்கலாம்’ - அதிகார தோரணையில் பேசினாரா? ஊராட்சி மன்ற தலைவர்
சேலத்தில் ஊராட்சி மன்ற அதிமுக துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்தில் கடும் வாக்குவாதம். கூட்டம் முடிந்த பிறகு ஒவ்வொரு கவுன்சிலராக வரவழைத்து ஊராட்சி மன்ற தலைவர் கையெழுத்து பெற்றதால் பரபரப்பு.
சேலம் மாவட்டம் பனங்காடு அருகே உள்ள ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்பது வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு தலைவராக தமிழரசி என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆண்டிப்பட்டி ஊராட்சியின் அதிமுக துணைத் தலைவர் மணிகண்டன் என்பவர் காசோலைகளில் கையெழுத்துயிடுவது இல்லை மற்றும் ஊராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறி, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டம் துவங்கியவுடன் துணைத் தலைவர் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.
தான் காசோலையில் கையெழுத்துயிடவில்லை என்பதற்கான ஆதாரங்களை காட்டுங்கள் என்று கேள்வி எழுப்பியுடன், அதை காட்ட மறுத்து தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரண்டிற்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர்கள் தலைவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தனர். இதனால் இக்கூட்டம் போராட்டகளமாக மாறி, பரபரப்பாக காட்சியளித்தது. இதையடுத்து கூட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் முடித்து வைத்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக 5 வார்டு உறுப்பினர்களும், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஆதரவாக மூன்று வார்டு உறுப்பினர்களும் கையெழுத்திட்டனர். மீதமுள்ள இரண்டு வார்டு உறுப்பினர்கள். இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டம் முடிந்த பிறகு ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி ஒவ்வொரு வார்டு உறுப்பினராக அழைத்து வந்து காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இடமிருந்து மற்றொரு வார்டு உறுப்பினருக்கு மாற்றுவதற்காக கையெழுத்துப் பெற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணைத் தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பெண் வார்டு உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில் வார்டு உறுப்பினர் எவ்வாறு என்னிடம் கேள்வி கேட்கலாம் என்று அதிகார தோரணையில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.