Salem: பெண்ணின் மூச்சுக்குழாயில் சிக்கிய உலோக குழாய்; அகற்றி சேலம் அரசு மருத்துவர்கள் சாதனை
பிளாஸ்டிக், உலோகம் உள்ளிட்ட எந்தவித பொருட்கள், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்டவைகளில் சிக்கிக் கொண்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை நாடவேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30 வயது பெண் ஒருவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட விபத்தில் தொண்டையில் உணவுக் குழாய் மற்றும் மூச்சுக் குழாயில் அடைப்பு இருந்ததினால் டிராக்கியஸ்டமி உலோகக் குழாய் வழியாக சுவாசித்துக் கொண்டிருந்தார். இது பழுதடைந்து, அதன் பாதி பகுதி உடைந்து மூச்சுக்குழாயில் சிக்கிய நிலையில், கடந்த 12 ஆம் தேதி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று காது, மூக்கு, தொண்டை மற்றும் மயக்கவியல் பிரிவு சேர்ந்து நவீன தொழில்நுட்பக் கருவியின் உதவியுடன் நுரையீரல் சிக்கிய, உடைந்த டிராக்கியஸ்டமி உலோகக் குழாயை பாதுகாப்பான முறையில் அகற்றி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதால் உயிரிழப்பு ஏற்படாமல் காப்பாற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தலைவர் மணி, "கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை காது, மூக்கு, தொண்டை பிரிவில் 2,065 அறுவை சிகிச்சைகள் மற்றும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1071 அறுவை சிகிச்சைகளும், சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த ஓராண்டில் 215 அவசர அறுவை சிகிச்சைகளும், அதில் தொண்டையில் சிக்கிய பல்வேறு பொருட்கள் நீக்குவதற்கான 53 அறுவை சிகிச்சைகளும் மற்றும் 1,962 மூக்கு மற்றும் காதுகளில் சிக்கிய பொருட்களை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தவறுதலாக உலோகம், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் உணவுக் குழாயில் சிக்கி விட்டால் உடனடியாக அரசு மருத்துவமனை தொடர்பு கொண்டு உடனடி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். டிராக்கியஸ்டமி உலோகக் குழாய் வைத்துள்ள நோயாளிகள் ஆண்டிற்கு ஒரு முறை உலோக குழாயை அகற்றி விட்டு வேறு ஒரு புதிய குழாய் செலுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் டிராக்கியஸ்டமி உலோகக் குழாய் போன்று புதிய கருவி ஒன்று வந்துள்ளது. அதனை செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. நோயாளிகள் முடிந்தவரை அரசு மருத்துவமனைகளுக்கு வர வேண்டும். தனியார் மருத்துவமனைகளை போலவே அரசு மருத்துவமனையிலும் புதிய நவீன கருவிகள் அனைத்தும் உள்ளது. எனவே பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை கண்டு அஞ்சிடாமல் சிகிச்சைக்கு வரவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இதற்கான அறுவை சிகிச்சைகள் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் பெரும்பாலானவை மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறினார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )