Cracker Factory Fire Accident: சேலம் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழந்த சோகம்
வானவெடி தயாரிக்கும் பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளை சரக்கு வாகனத்தில் இருந்து இறக்கி வைக்கும் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சேலம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் குப்பனூர் அருகே வெள்ளியம்பட்டி பகுதியில் கோமாளி வட்டம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தயார் செய்யப்படும் பட்டாசு வகைகள் சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள பட்டாசு கடைகளுக்கு ஜெயக்குமார் விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை பட்டாசு ஆலைக்கு கொண்டுவரப்பட்ட வானவெடி தயாரிக்கும் பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளை சரக்கு வாகனத்தில் இருந்து இறக்கி வைக்கும் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆலையில் இருப்பு இருந்த பட்டாசு ரகங்கள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் சிவகாசி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் நிகழ்வடத்திலேயே உயிரிழந்தார். சின்னனூர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மற்றும் கார்த்திக் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வீராணம் காவல் நிலைய போலீசார் தீக்காயம் அடைந்த இருவரையும் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த செவ்வாய்பேட்டை மற்றும் வாழப்பாடி நிலைய தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து குறித்து வீராணம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் பிருந்தா விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து தடவியல் துறை நிபுணர்கள் எந்த வகையான வெடி மருந்து பயன்படுத்தப்பட்டது, வெடி விபத்திற்கு காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். பட்டாசு ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா, அரசு விதிமுறைகளை பின்பற்றி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.