(Source: ECI/ABP News/ABP Majha)
Salem Book Fair: சேலம் புத்தக கண்காட்சி 250 அரங்குகளுடன் மிக பிரமாண்டமாக நாளை துவக்கம்
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் புதிய படைப்புகளை சேலம் புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில் வெளியிட நடவடிக்கை.
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடங்க உள்ளது. இந்த புத்தக கண்காட்சியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி துவக்கி வைக்க உள்ளார்.
புத்தக கண்காட்சி:
இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 பதிப்பகங்கள் மூலம் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த புத்தக கண்காட்சி நாளை துவங்கி வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது மட்டுமின்றி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தினசரி கலை பண்பாடு கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சிக்கு வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கேயே அமர்ந்து புத்தகங்கள் வாசித்து பயன்பெறும் வகையில் வாசிப்பு அரங்குகளும் ஒலி ஒளி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சியை பார்க்க வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் புதிய படைப்புகளை சேலம் புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் வெளியிட தயாராக உள்ள படைப்புகளை உடனடியாக சேலம் மாவட்ட மைய நூலகத்தில் வழங்கி விபரங்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், சேலம் மாவட்டத்தைச் சார்ந்த உள்ளூர் படைப்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புத்தகக் கண்காட்சியில் தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு எழுத்தாளர்கள் பல்வேறு பதிப்பகங்கள் மூலமாகவோ, தனியாகவோ வெளியீடு செய்திருக்கும் நுால்களை இந்த அரங்கத்தில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த ஒவ்வொரு படைப்பாளரும் நுால்களில் 25 பிரதிகளை உடனடியாக சேலம் மாவட்ட மைய நூலகத்தில் ஒப்படைத்து, தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சேலம் மாவட்ட மைய நுாலகத்தின் மூலம் நுால்கள் அனைத்தும் புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அரங்கில் காட்சிப்படுத்தப்படும். விழாவின் நிறைவில் விற்பனையான நுால்கள் போக மீத நுால்களை மீண்டும் முறையாக நூலக அலுவலர் மூலமாக திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள படைப்பாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் புத்தகத் திருவிழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வசதியை புத்தக படைப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.