இயற்கை விவசாயிகளின் தேசிய இயற்கை மாநாடு செப்.12இல் கோவையில் தொடங்குகிறது - பி.ஆர்.பாண்டியன்
மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு மாநில ஆட்சியாளர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர் கூட்ட குழு சேலம் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் சேலம் மூன்று ரோடு அருகே தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரும், தலைமை ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கே.ராமசாமி, விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, இயற்கை விவசாயிகள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து தேசிய இயற்கை மாநாட்டை வரும் செப்.12,13,14ம் தேதிகளில் கோவை கொடிசியா மைதானத்தில் நடத்துகிறோம். இந்த மாநாட்டில் உலகளாவிய வேளாண்மை துறை சார்ந்த ஆளுமைகள் கலந்துகொண்டு நமது பாரம்பரிய விவசாயம். அதனை மக்களிடம் அதிக அளவில் கொண்டு சேர்க்க சந்தை படுத்துதல், வேளாண்மை உற்பத்தி பெருக்கம் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது. மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு மாநில ஆட்சியாளர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமரும், முதல்வரும் பங்கேற்பார்கள் என நம்புகிறோம் என்றார்.

கழிவு நீரால் மண் மாசுபடுவதை தடுத்து அதனை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்துவது தொடர்பாகவும், அன்றாட கழிவுகளை இயற்கை உரமாக மாற்றுவது தொடர்பாகவும், பாசன நீரில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது பற்றியும் விரிவாக பேசி அதற்கு தீர்வு காணும் வகையில் மாநாட்டை நடத்த இருக்கிறோம். மக்களுக்கு ரசாயனத்தை மாற்றி பாரம்பரிய விவசாயம் மூலம் இயற்கை உணவுகளை வழங்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஆளுமைகள் எடுத்துரைக்க உள்ளனர். நெல்லில் மரபணு திருத்தப்பட்ட விதையை இரண்டை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மரபணு விதை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இதனை ஒன்றிய வேளாண்மை அமைச்சர் அறிமுகப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விலங்குகளில் தான் மரபணு மாற்றம் என்ற நிலை இருந்த நிலையில், உள்நாட்டு விதையில் உற்பத்தியை பெருக்க மரபணு திருத்தம் செய்வது மனிதர்களுக்கு நோய்களை உருவாக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்து வருகிறது. அதனால் தமிழக அரசு உடனடியாக உயர்மட்ட குழுவை அமைத்து ஆராய்ந்து ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.





















