Muthtamzh Ther: சேலம் வந்த முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி- மலர் தூவி உற்சாக வரவேற்பு
"முத்தமிழ் தேர்" சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடல், தாதகாப்பட்டி சாலை மற்றும் ஓமலூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் காட்சிக்காக வைக்கப்பட்ட உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இளம் தலைமுறையினருக்கு கருணாநிதியின் பன்முகத்தன்மையினை எடுத்துச் செல்லும் வகையில் "முத்தமிழ் தேர்" என்ற பெயரில் பேனா வடிவிலான அலங்கார ஊர்தி கடந்த 4 ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கி ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்திற்கு இன்று வந்த அலங்கார ஊர்தியை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மற்றும் அதிகாரிகள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பார்வைக்கு இந்த ஊர்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவிகளுக்கு சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் பேனாக்களை வழங்கினார். பின்னர் முத்தமிழ் தேரில் அமைந்திருந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் அவரது தாயாரின் முழு உருவ சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்த வாகனத்தில் கருணாநிதி மற்றும் அவரது தாயாரின் முழு உருவ சிலைகள், அவர் எழுதிய நூல்கள், முன்னாள் முதல்வர் கலைஞரின் சிறுவயது முதல் முதல்வர் வரை உள்ள முக்கிய புகைப்படங்கள் மற்றும் அவர் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் ஊர்தியின் இருபுறங்களிலும் எல்இடி திரை அமைக்கப்பட்டு கலைஞர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காட்சிப்படுத்தப்படுகின்றது. முன்னாள் முதல்வர் கலைஞரின் முழு உருவ சிலை மற்றும் புகைப்படம் அருகே நின்று ஏராளமான பொதுமக்கள் செல்பி எடுத்து செல்கின்றனர். இன்று சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த "முத்தமிழ் தேர்" சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடல், தாதகாப்பட்டி சாலை மற்றும் ஓமலூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் காட்சிக்காக வைக்கப்பட்ட உள்ளது. பின்னர் தர்மபுரி வழியாக நாளை கிருஷ்ணகிரி செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. முத்தமிழ் தேர் செல்கின்ற பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.