சேலம்: குடிநீர் வழங்கல் திட்டப் பணியை நகராட்சி கமிஷனர் திருப்பி அனுப்பியதாக நகராட்சி தலைவர் தர்ணா
குடிநீர் வழங்கல் திட்ட பணிகளை நகராட்சி கமிஷனர் வேண்டாம் என திருப்பி அனுப்பியதாக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி பகுதியில் 30 வார்டுகள் உள்ளது. மேட்டூர் நகராட்சி பகுதியில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேட்டூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்கும் வகையில், மத்திய அரசின் நீர்வளத் துறை சார்பில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ 46.45 குடிநீர் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு மேட்டூர் நகராட்சி உட்பட 11 நகராட்சி, 79 பேரூராட்சிகளுக்கு மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் குடி நீர் வழங்கல் திட்டப் பணிக்கான அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர், கடந்த நவம்பர் மாதம் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு பலரும் விண்ணப்பித்து இருந்தனர்.
அதன்படி, மேட்டூர் நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ 46.45 கோடியில் குடிநீர் வழங்க பெற்று பணிகான டெண்டர் வெளியிடப்பட்டது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு, தகுதியான நபருக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், மேட்டூர் நகராட்சிக்கான குடிநீர் வழங்க திட்டத்தை நகராட்சி தலைவருக்கு தகவல் தெரிவிக்காமல் மேட்டூர் நகராட்சி கமிஷனர் திருப்பி அனுப்பியதாக குற்றம் சாட்டி, நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன்பு மேட்டூர் நகராட்சி மன்ற தலைவர் சந்திரா திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து மேட்டூர் நகராட்சி தலைவர் சந்திரா கூறுகையில், நகராட்சி கமிஷனர் அம்ருத் திட்டத்தில் ரூ 46.45 கோடியில் ஒதுக்கப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டப் பணிகளை எனக்கு தெரியாமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். மேட்டூர் நகராட்சிக்கு இந்த திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்தத் திட்டம் குறித்து நகராட்சி கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டு கவுன்சிலர்கள் வாக்கெடுப்பு மூலம் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதுகுறித்து மேட்டூர் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மேட்டூர் நகராட்சியில் உள்ள பெரும்பாலான கவுன்சிலர்கள் குடி நீர் திட்டம் வேண்டாம் , அதற்கு பதிலாக சாலைப் பணிகள் திட்டம் வேண்டும் என கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால் தான் குடிநீர் திட்டம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தன்னிச்சையாக முடிவு எடுத்து, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.