(Source: Matrize)
கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள 3300 பணியிடங்கள் - அமைச்சர் பெரியகருப்பன் சொன்ன தகவல்
அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயத்திற்கு பயிர்கடனாக ஆண்டுக்கு சராசரியாக ரூ.6000 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த தொகை இரட்டிப்பாக்கப்பட்டது.
மாநில அளவிலான 71வது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழா சேலம் மாநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறையின் பல்நோக்கு சேவைத் திட்டத்தின் கீழ் ரூ.3.34 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 5 கட்டடங்களையும், ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 11 புதிய நியாயவிலைக்கடை கட்டடங்களையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர். மேலும் 6,181 பயனாளிகளுக்கு ரூ.55.71 கோடி மதிப்பிலான கூட்டுறவுத்துறையின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாநில, மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள், பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், அனைத்து துறைகளும் போட்டி போட்டு செயல்படுவதால்தான் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. புயல், வெள்ளம் போன்ற பேரிடர் பாதிப்புகளில் கூட செயல்பட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்க்கிறது கூட்டுறவுத்துறை. தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் புதிதாக ஆயிரம் மருந்தகம் தொடங்கப்பட உள்ளது. தேர்தல் காலத்தில் முதல்வர் அறிவித்த பெரும்பாலான வாக்குறுதிகள் கூட்டுறவு துறை மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையில் ரூ.19,878 கோடி மூலம் 3 வகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயத்திற்கு பயிர்கடனாக ஆண்டுக்கு சராசரியாக ரூ.6000 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த தொகை இரட்டிப்பாக்கப்பட்டது. முதல் ஆண்டு ரூ.12,000 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டு, இரண்டாவது ஆண்டு ரூ.13,400 கோடியும், கடந்த ஆண்டு ரூ.15,000 கோடியும் வழங்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு ரூ.16,500 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், கூட்டுறவுத் துறை மூலம் கடந்த ஆண்டு ரூ.86,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூபாய் 1 லட்சம் கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட மக்களின் ஆதரவு அவசியம். கூட்டுறவு, கடன் தரும் அமைப்பு மட்டுமல்ல; இதர வங்கிகளில் உள்ள வரவு, செலவு கணக்குகளை கூட்டுறவு வங்கிகளில் துவங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் தரும் பங்கு தொகை, சேமிப்பு தொகை உள்ளிட்டவற்றை வைத்துதான் கடனுதவிகளை வழங்க முடியும். எனவே, கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.5 லட்சம் வரை கல்விக்கடன் வழங்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார் என்று கூறினார். மேலும் அனைத்து அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். கூட்டுறவுத்துறையில் இதுவரை 10,500 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 3300 காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடைகள் படிப்படியாக சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் சிங், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.