Mettur Dam: முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை... உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்
மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் 3வது முறையாக எட்டியுள்ளது. ஒரே ஆண்டில் மூன்று முறை மேட்டூர் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரை கொண்டு சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதியில் இருந்து ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் குறுவை, சம்பா மற்று தாளடி பயிர்களுக்கு 330 டிஎம்சி நீர் தேவைப்படும். அதேபோல், அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை கொண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
கேரளா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியது. பின்னர், அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நடப்பாண்டில், கடந்த ஜூலை 30-ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை முதல் முறையாக எட்டியது. பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையில் அணையின் நீர்மட்டம் குறைந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்ததால் ஆகஸ்ட் 12-ம் தேதி 2வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் 120 அடியை எட்டியது. பின்னர், மழை குறைந்ததாலும், பாசனத்துக்கு நீர் திறப்பின் காரணமாகவும் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைய தொடங்கியது. டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக பாசனத்துக்கு நீர் தேவை குறைந்ததால், நீர் திறப்பும் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக அதிகரித்து வந்தது. இந்நிலையில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை மூன்றாவது முறையாக நேற்றுமுன்தினம் இரவு எட்டியது. ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ள நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கால்வாய் பாசனத்திற்காக 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவினை எட்டியுள்ள நிலையில், காவிரி உபரிநீரை ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நிரப்பும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் மேட்டூர், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து மின் மோட்டார்கள் மூலம் நீரேற்று செய்யப்பட்டு ஏரிகளுக்கு வழங்கும் செயல்பாட்டினை சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திரன், மேட்டூர் அணையின் வெள்ள நீரை சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டம் ரூ.673.88 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மேட்டூர் அணையானது அதன் முழு கொள்ளளவான 120 அடியினை எட்டும் பொழுது அணையின் இடது கரையின் நீர் பரப்பு பகுதியிலிருந்து வெள்ள நீரை திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம் துணை நீரேற்று நிலையம், கன்னந்தேரி துணை நீரேற்று நிலையம் மூலமாக 82 ஏரிகள், குளங்களுக்கு நீர் சென்றடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சுமார் 70 முதல் 80 சதவிகித ஏரிகளுக்கு நீர்நிரப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் 4,06116 ஏக்கர் நிலங்கள் பாசனம் மற்றும் குடிநீர் வசதிபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் கடந்த 31.07.2024 முதல் மூன்று நீரேற்று நிலையங்களிலும் உள்ள 27 மின் மோட்டார்கள் மற்றும் பம்புகளுக்கான சோதனை ஓட்டத்தின் மூலம் 40 ஏரிகளுக்கு 267 மில்லியன் கன அடி நீர் நீரேற்றம் செய்யப்பட்டு 2,300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. இதன்மூலம் விவசாயப் பயன்பாடு மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது என கூறினார்.