சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் - அரசுக்கு முக்கிய தலைவர் விடுத்த கோரிக்கை
தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டம் சேலம் தான். எனவே ஆத்தூரை தலைமை இடமாகக் கொண்டு சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 3 ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் அத்திக்கடவு அவினாசி திட்டம் போல திருமணிமுத்தாறு திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஆயிரக்கணக்கான ஏரி குளங்கள் நிரப்ப வேண்டும். தெருநாய்கள் கடித்து ஆடு, மாடுகள் இறந்து விடுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும். பள்ளிகளை சுற்றி அதிகளவில் உள்ள போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே டேனிஷ்பேட்டை பகுதியில் அக்ரி காலேஜ் அமைக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தற்போதைய அரசியல் விளம்பர அரசியலாகவும் வியாபார அரசியலாகவும் விமர்சன அரசியலாகவும் மட்டுமே உள்ளதாகவும் அரசியலில் மக்களின் வளர்ச்சியே இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காமல் சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த 50 பேரை வீட்டிற்கு அழைத்து வந்து வெள்ள நிவாரணம் கொடுத்ததாக போட்டோசூட் நடத்தியதாகவும், சினிமாவில் நடிப்பதை போல விஜய் அரசியலிலும் நடிப்பதாக விமர்சித்த அவர் விஜயின் நடிப்பை கண்டு மக்கள் ஏமாறக்கூடாது என்றார். மேலும் டைரக்டர் சந்திரசேகர் மகன் என்பதற்காகவே விஜய்க்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக குறிப்பிட்ட அவர் வாரிசு அரசியல் குறித்து அவர் பேசுகிறார் என்றும் விஜய் பற்றி தெரியாமல் சிலர் அவரை ஆதரிப்பதாகவும் சாடினார். தொடர்ந்து, நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆத்தூரை தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈஸ்வரன், திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை மட்டுமே குறிவைத்து சிலர் காய் நகர்த்துவதாகவும் தெரிவித்தார். மேலும் விசிகவில் நிலவும் உட்கட்சி விவகாரத்திற்கு திருமாவளவன்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், புயல், வெள்ள பாதிப்பு குறித்து அரசியல் லாபம் தேடாமல் மீட்பு நடவடிக்கைக்கு உதவியாக மத்திய அரசு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு, பாதிக்கப்பட்டவர்களை வீட்டிற்கு அழைத்து நிவாரணம் கொடுத்தது தமிழக அரசியலில் இதுதான் முதல் தடவை. ஆனால் தவெக தலைவர் விஜய் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து நிவாரணம் கொடுக்காமல் சென்னை டிபி சத்திரம் பகுதியை சேர்ந்த மக்களை வீட்டிற்கு அழைத்து போட்டோசூட் நடத்தி இருக்கிறார் என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட சிறிய மாவட்டங்கள் அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் தலைவாசலில் தொடங்கி கொளத்தூர் வரை 11 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பெரிய மாவட்டமாக உள்ளது. எனக்குத் தெரிந்து தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டம் சேலம்தான். எனவே ஆத்தூரை தலைமை இடமாகக் கொண்டு சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுபுறம் சங்ககிரி, திருச்செங்கோடு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி திருச்செங்கோடு மாவட்டமாக வேண்டும் என்று கூறினார்.